இலங்கையின் போர் சம்பவங்களை வர்ணிக்க கனடாவுக்கு உரிமை இல்லை: உயர்ஸ்தானிகருக்கு கடிதம்
கனடாவுக்கு இலங்கையின் போர் சம்பவங்களை இனப்படுகொலை என்று கூறுவதற்கு உரிமை இல்லை என புதிய மக்கள் முன்னணி கட்சி தெரிவித்துள்ளது.
குறித்த கட்சி கனடாவிடம் கையளித்த கடிதத்திலே இதனை தெரிவித்துள்ளது.
காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பான தேசிய விசாரணையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் கனடா இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் அந்த இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறுவதற்கு உரிமையில்லை என்று கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ற்கு அனுப்பிய கடிதம் ஒன்றிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிராகரிப்பு
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையை இலக்காகக் கொண்ட போர் என்பதை ஐக்கிய நாடுகள் சபை கூட நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களை கனடா ஊக்குவிக்கிறது என்ற இந்திய குற்றச்சாட்டை நினைவுபடுத்தியுள்ள புதிய மக்கள் முன்னணி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் கனடா, பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையின் உள்விவகாரங்களில் கனேடிய உயர்ஸ்தானிகரின் சமீபத்திய தலையீடுகளையும் விமர்சித்துள்ள புதிய மக்கள் முன்னணி, உயர்ஸ்தானிகர் வால்ஷ் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறாரா என்றும் கேலிக்கையான ஒரு கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
