வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்திய யோசனைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
அமைச்சரவை அனுமதி
வடக்கு - கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆழமற்ற கடற்பகுதியில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடலட்டை உயிரின வளர்ப்பு கருத்திட்டம்
வெளிநாட்டு செலாவணி ஈட்டுவதை அதிகரித்தல் மற்றும் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு, வணிக ரீதியான கடலட்டை உயிரின வளர்ப்பு கருத்திட்டமொன்று இலங்கை தேசிய நீர் உயிரின அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கருத்திட்டத்திற்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் 5,000 ஏக்கர் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றில் 100 ஏக்கர்களுடன் கூடிய கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.