கொழும்பை உலுக்கிய தமிழ் வர்த்தகரின் கொலை! அரசியல்வாதிகளிடமும் வாக்குமூலம் பதிவு
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர், கொழும்பில் பட்டப்பகலில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 15 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலைப் பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
வாக்குமூலம் பதிவு
முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது, கையடக்க தொலைபேசி கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பொரளை மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தினேஷ் சாப்டரின் காரில் இருந்த சாட்சியங்கள் மற்றும் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய, சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டரின் படுகொலை தொடர்பில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரைன் தோமஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்றுமுன்தினம் இரவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
கோடிக்கணக்கான ரூபா பணம் தொடர்பான பிரச்சினை
படுகொலை செய்யப்பட்ட வர்த்தகரிடம், பிரைன் தோமஸ் பெற்றுக்கொண்ட கோடிக்கணக்கான ரூபா பணம் தொடர்பான பிரச்சினை குறித்தும் இதன்போது விரிவாக வினவப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் ஒன்றுக்குச் செல்வதாக தமது மனைவிடம் கூறிவிட்டு நேற்றுமுன்தினம் பிற்பகல் 2 மணி முதல் 3 மணிவரையான காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி, மலர் வீதிப் பகுதியில் உள்ள தமது வீட்டிலிருந்து தினேஷ் ஷாப்டர் வெளியேறியுள்ளார்.
எவ்வாறிருப்பினும், தம்மிடமிருந்து கோடிக்கணக்கான ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட கிரிக்கெட் வர்ணனையாளர் பிரைன் தோமஸைச் சந்திக்கச் செல்வதாக, தமது செயலாளரிடம் தினேஷ் ஷாப்டர் கூறியிருந்தார் என்று பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், நேற்றுமுன்தினம் இரவு பிரைன் தோமஸின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், பிரைன் தோமஸுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து, கொழும்பு மேலதிக நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு அமைய, பொரளைப் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்துக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தினேஷ் ஷாப்டரின் தொலைபேசித் தரவுகளை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட தொலைபேசிச் சேவை நிறுவனங்களுக்கும் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: ராகேஷ், சிவா மயூரி
பிரபல வர்த்தகர் சர்வ சாதாரணமாக கொலை செய்யப்படும் நிலையில் பொதுமக்களின் நிலை என்ன? |
முதலாம் இணைப்பு
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் சாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் 10க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மயான ஊழியர்களிடம் வாக்குமூலம்
கொலைச் சம்பவம் தொடர்பில் பொரளை மயான ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பொரளை பொது மயானத்தில் சாப்டர் தனது காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
சம்பவதினத்தன்று பிற்பகல் தினேஷ் சாப்டர் தனது இல்லத்திலிருந்து வெளியேறி முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸை சந்திப்பதற்காக பொரளைக்கு செல்வதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் தினேஷ் சாப்டரிடமிருந்து 1.4 பில்லியனை பெற்றுக்கொண்டதாகவும், பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் பொலிஸாரிடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
தோமஸை சந்திக்கப் போவதாக தினேஷ் சாப்டர் தனது மனைவியிடம் கூறியிருந்ததால், தோமஸிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
உடல்ரீதியான துன்புறுத்தல்
அத்துடன், மயானத்தில் இருந்த தொழிலாளி ஒருவர், அத்தியட்சகரின் காருக்கு அருகில் அடையாளந்தெரியாத நபர் ஒருவர் செல்வதைக் கண்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திட்டமிட்டு, மிகவும் சூட்சமமாக இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
51 வயதான தினேஷ் சாப்டர், காரில் வைத்து சில உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொரளை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தினேஷ் ஷாப்டரின் கழுத்து நெரிக்கப்பட்டமையே, அவரது மரணத்திற்கான காரணம் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்தின் பதில் நீதவான் சம்பத் ஜயவர்தனவின் உத்தரவிற்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரியினால் இந்த பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்டுள்ளது.
