பிரபல தமிழ் வர்த்தகரின் மரணத்தில் தொடரும் மர்மம்! வெளியாகியுள்ள அறிக்கை
ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில்,சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களும் குடும்பத்தவர்களும் இந்த திடீர் மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் முன்வைத்துள்ள வேண்டுகோள்
மேலும் தமது உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து, உண்மைகளை வெளிக்கொணர மதிப்பளிக்க வேண்டும் என குடும்பத்தினர் ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினேஷ் ஷாப்டர், குடும்பத்தில் சிறந்த ஒருவர் எனவும் குடும்பத்தின் இதயம் போன்றவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவர் வியாபாரம் விளையாட்டு துறைக்காக பாரிய பங்களிப்பை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினர் நண்பர்கள் உள்ளிட்ட பலராலும் அடுத்துவரும் பல தலைமுறையினருக்கு அவர் நினைவு கூறப்படுவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் கருத்து
இந்நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவு உள்ளிட்ட நான்கு குழுக்கள் தினேஷ் சாப்டர் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தினேஷ் ஷாப்டரின் கைகளை பின்புறமாக ஒருவகையான பிளாஷ்டிக் வயரினால் கட்டி இருந்தனர். அவருடைய கழுத்தும் வயரினால் கட்டப்பட்டிருந்தது.
இதனூடாக கழுத்து இருக்கப்பட்டமையினாலே அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும் பிரையன் தோமஸ் மற்றும் பல தரப்பினரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் பிரையன் தோமஸ் 1400 இலட்சம் ரூபாவை பெற்று மீண்டும் வழங்காமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.”என கூறியுள்ளார்.
தற்போது தினேஷ் ஷாப்டர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரையன் தோமஸுற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும், இந்த இரண்டு கடவுச்சீட்டுகளுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.
இதேவேளை தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்கக் கருவியின் அழைப்பு தொடர்பான தொலைத்தொடர்பு பகுப்பாய்வு அறிக்கையை வழங்க தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிடுமாறு பொரளை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
இதற்கு சேவை வழங்குநர்களிடமிருந்து பதிவைப் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பணிப்புரை
இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளை அழைத்து தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் கேட்டறிந்துக்கொண்டுள்ளார்.
இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் சட்டத்தை முழுமையாக பயன்படுத்துமாறு இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
கொலை,போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் தகுதி தராதரம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது தெரிவித்துள்ளார்.
தினேஷ் ஷாப்டர் தொடர்பான சில தகவல்கள்
அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் கடத்தப்பட்டு நேற்று மாலை பொரள்ளை மயானத்தில் கார் ஒன்றிற்குள் இருந்து கைகள் கட்டப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தினேஷ் ஷாப்டர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டாளராக செயற்பட்ட சந்திர ஷாப்டரின் மகனாவார்.
சட்டமாணியான தினேஷ் ஷாப்டர், பிரித்தானியாவின் பட்டைய கணக்காய்வாளர் நிறுவனத்தின் ஒரு உறுப்பினராவார்.
வியாபார நிர்வாகம் தொடர்பில் முதுமாணி பட்டம் பெற்ற அவர்,நாட்டின் பிரபல நிதி நிறுவனம் ஒன்றின் முகாமைத்துவ பணிப்பாளராகவும்,பிரபல காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
You May Like This Video