கொழும்பில் பிரபல தமிழ் தொழிலதிபர் படுகொலை - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழர் தொழிலதிபரான தினேஷ் ஷாப்டர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சந்தேகநபரான முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுற்கு எதிரான தடை உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இன்று வழங்கியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும், இந்த இரண்டு கடவுச்சீட்டுகளுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.
தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்கக் கருவியின் அழைப்பு தொடர்பான தொலைத்தொடர்பு பகுப்பாய்வு அறிக்கையை வழங்க தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிடுமாறு பொரளை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர். இதற்கு சேவை வழங்குநர்களிடமிருந்து பதிவைப் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரிடம் 138 கோடி ரூபாவை பிரையன் தோமஸ் கடனாக பெற்றதாகவும், அதனை மீண்டும் கொடுக்காமையினால் அவருக்கு எதிரான 3 பொலிஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடனை திருப்பிச் செலுத்த மறுத்த நிலையில் அடியாட்களை வைத்து இந்த கொலையை செய்ததாக பிரையன் தோமஸுற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.