நாமலின் பெயரை பயன்படுத்தி அச்சுறுத்தப்பட்ட நபர்! கிளிநொச்சியில் சம்பவம் (Photo)
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில் நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் அரச காணியை சட்ட ரீதியாக நீண்டநாள் குத்தகையில் பெற்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றவரின் தற்காலிக வீடு நேற்றிரவு( 19) தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடு, உடமைகளுக்கும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாமலின் ஆள் தான் எனக் கூறி வந்த தர்மசிறி என்பவரே இவ்வாறு நடந்துகொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில்,
குறித்த காணியினை அபகரிக்கும் முயற்சியில் இதற்கு முன்னரும் பல தடவைகள் நாமலின் பெயரை பயன்படுத்தி எம்மை அச்சுறுத்தி தாக்கியுமுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் உள்ளது ஆனால் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி உள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பிலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டனர்.
மேலும், நாமல் ராஜபக்சவின் ஆட்கள் நாங்கள் என்று கூறிய தர்மசிறி என்ற நபர் நேற்று மாலை எமது இடத்திற்கு வருகை தந்து இந்த காணியில் எந்த அபிவிருத்தியும் செய்யக்கூடாது மீறி செய்தால் வீட்டோடு அனைவரையும் தீயிட்டு கொளுத்தி விடுவேன் என்று அச்சுறுத்தினார்கள். நாமல் ராஜபக்ஷவின் ஆட்கள் நாங்கள் என்று கூறிய தர்மசிறி என்ற நபர் கடந்த முறையும் வீட்டில் உள்ளவர்களை கட்டி வைத்து அடித்து விட்டு பொருட்களை சேதப்படுத்தியதோடு, துவக்குகளையும் காட்டி மிரட்டி சென்றுள்ளார்கள். இது தொடர்பாக பொலிஸில் முறைப்படு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.





