வரவுசெலவுத் திட்டங்கள் தோல்வியடைந்தாலும் அரசாங்கத்தின் இருப்புக்கு பாதிப்பு இல்லை:மகிந்த ஜயசிங்க
உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்தாலும், அதனால் அரசாங்கத்தின் இருப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என பிரதி தொழில் அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தேசிய மக்கள் சக்தியின் வரவுசெலவுத் திட்டம் அல்ல, மக்களின் வரவுசெலவுத் திட்டமே எனவும் அவர் கூறினார்.
சமீபத்தில் தோல்வியடைந்த கொழும்பு மாநகர சபை வரவுசெலவுத் திட்டத்தில், அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்தும் பல திட்டங்கள் அடங்கியிருந்ததாகவும் அவர் விளக்கினார்.
அரசாங்கம் நடவடிக்கை
இந்த வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிவாரணங்கள், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து மக்களுக்கும் பயன் அளிப்பவையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், இதனை எதிர்த்து வாக்களித்த உள்ளூராட்சி உறுப்பினர்கள், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கே எதிராக செயல்பட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
சவால்களுக்கிடையிலும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
வரவு - செலவுத் திட்டம்
இதேவேளை, ஏதேனும் ஒரு உள்ளூராட்சி சபையில் இரண்டு தடவைகள் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஆட்சியைப் பொறுப்பேற்று மூன்றாவது வருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் பட்சத்தில், குறித்த உள்ளூராட்சி சபையின் தலைவர் இயல்பாகப் பதவியில் இருந்து விலக்கப்படுவார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலதிக தகவல்-ராகேஷ்