தேசிய செழிப்பில் பௌத்த மதத்தின் பங்கு முக்கியம் - ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பௌத்தம் நடைமுறைக்கு ஏற்றதும் காலத்தால் அழியாததுமான ஒரு தத்துவத்தை வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதும் செழிப்பான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் அவசியமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினது அறம் வளர்ச்சியின் முதல் படி
இலங்கையில் ஆரம்பமான உலக பௌத்த மகா சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஆரம்ப நிகழ்வில் நேற்று(29.11.2026) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புத்தபெருமானின் போதனைகளை விளக்கிய ஜனாதிபதி, ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை அல்லது ஸ்திரமின்மை என்பது அதன் ஆட்சியாளர்களின் நடத்தையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
"ஆட்சியாளர் நீதிநெறியுடனும் கொள்கைப் பற்றுடனும் இருந்தால் நாடு செழிப்பை நோக்கிப் பயணிக்கும். ஆட்சியாளர் ஊழல் மிக்கவராகவும் அறநெறியற்றவராகவும் இருந்தால் முழு நாடும் அராஜக நிலைக்குத் தள்ளப்படும். இந்தக் கொள்கை அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். அதனால்தான் பௌத்தம் நடைமுறைச் சாத்தியமானதும் காலத்தால் அழியாததுமான தத்துவமாக விளங்குகின்றது" என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மகா சங்கத்தின் 11ஆவது பொதுச் சபை மாநாடு
இந்த ஆண்டு நிறைவு விழா களனி, நாகானந்த சர்வதேச பௌத்த கற்கைகள் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது. இதில், 50 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த பீடாதிபதிகள், பௌத்த மதகுருமார்கள், பக்தர்கள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெருமளவிலானோர் கலந்துகொண்டுள்ளனர்.

1966ஆம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்ட உலக பௌத்த மகா சங்கத்தின் பிரதான நோக்கம் உலக அமைதியை மேம்படுத்துவதாகும். இந்த ஆண்டு நிறைவு நிகழ்வின் ஒரு பகுதியாக நாகானந்த கற்கைகள் நிறுவனமும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூன்று பௌத்த நிகாயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மகாநாயக்க தேரர்கள் மற்றும் அநுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், உலக பௌத்த மகா சங்கத்தின் 11ஆவது பொதுச் சபை மாநாட்டின் இரண்டாவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்ச்சிகளும் செயற்பாடுகளும் இன்று(29.11.2026) முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை இலங்கையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.