திடீரென பதவி விலகிய பிரித்தானிய சுகாதார அமைச்சர் அதிரடி.. பிரதமர் ஸ்டார்மருக்கு நெருக்கடி!
பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத்துறை அமைச்சரான வெஸ் ஸ்ட்ரீட்டிங், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி தனது பதவி விலகல் செய்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தொழிலாளர் கட்சி சந்தித்த பாரிய தோல்விகளைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தனது பதவி விலகல் கடிதத்தில், சுகாதார அமைச்சராக தான் செய்த சாதனைகளை வெஸ் ஸ்ட்ரீட்டிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல்
அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், "எங்கு தொலைநோக்கு பார்வை தேவையோ, அங்கு ஒரு வெற்றிடம் நிலவுகிறது, எங்கு வழிகாட்டுதல் தேவையோ, அங்கு திசைமாற்றம் காணப்படுகிறது" எனப் பிரதமரை நேரடியாக விமர்சித்துள்ளார்.
மேலும், தீவிர வலதுசாரி மற்றும் தேசியவாதக் கட்சிகளின் வளர்ச்சி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதை எதிர்கொள்ளும் வலுவான கொள்கை ஸ்டார்மரிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர் தொழிலாளர் கட்சியை வழிநடத்தப் போவதில்லை என்பது தற்போது தெளிவாகிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்ட்ரீட்டிங், அடுத்த கட்டத் தலைமைக்கான விவாதங்கள் ஆளுமைகளுக்கு இடையிலான மோதலாக இல்லாமல், கொள்கை ரீதியான விவாதமாக இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இவருக்கு முன்னதாக மேலும் சிலர் பதவி விலகியிருந்த நிலையில், பிரித்தானிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு எதிரான உட்கட்சி பூசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.