சிறுவனின் உயிரைப் பறித்த நாவற்பழம் - மட்டக்களப்பில் சோகம்
நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11 வயது சிறுவன்
பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த, 37ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி பயின்று வந்த ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று மாலை, சிறுவனின் வீட்டிற்கு முன்னால் இருந்த நாவல் மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்த நாவற்பழம் ஒன்றை சிறுவன் எடுத்து உண்டுள்ளார்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகள்
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலத்தில் கிடந்த நாவற்பழத்தின் மீது பாம்பின் விஷம் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.