கிரீஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானிய தொலைக்காட்சி தொகுப்பாளரின் உடல்
கிரீஸ் (Greece) தீவான சிமியில் (Simi) கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட பிரித்தானிய (UK) தொலைக்காட்சி ஒன்றின் தொகுப்பாளர் மைக்கேல் மோஸ்லி (Michael Mosley) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிமி தீவில் உள்ள தி அபிஸ் (The Abyss) என்று உள்ளூர் மக்களால் அறியப்படும் ஒரு ஆபத்தான குகை வளாகத்திற்கு அருகிலேயே ஒரு குடையுடன் இந்த உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகுப்பாளர், பெடி என்னும் கிராமத்தை விட்டு வெளியேறும் போது குடை ஒன்றை எடுத்துச்சென்றமை, அவரது கடைசி சிசிரிவி பதிவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தேடும் பணி
இந்நிலையில், தி அபிஸ் குகைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உடலுடன் குடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால், இந்த சடலம் காணாமல் போன தொலைக்காட்சி தொகுப்பாளரின் சடலமாக இருக்கலாம் என அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
எனினும், அதிகாரப்பூர்வமாக இன்னும் சடலம் அடையாளம் காட்டப்படாத போதும் 67 வயதான மோஸ்லி கடைசியாக புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பெடி கிராமத்தை விட்டு வெளியேறி பாறைகள் நிறைந்த பாதையை நோக்கிச் சென்றமை சிசிரிவி காட்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த ஐந்து நாட்களாக அவரை தேடும் பணி தொடரப்பட்ட நிலையில், கடற்கரையிலிருந்து பெடிக்கு செல்லும் பாறைப் பாதையில் அவர் நடந்து சென்றபோது, உயரத்திலிருந்து வீழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |