மன்னாரில் சோசலிச இளைஞர் சங்கம் சார்பில் கருப்பு ஜூலை நினைவூட்டல் துண்டுபிரசுரம் விநியோகம்
30 ஆண்டு கால போருக்கு வழி வகுத்த 'கருப்பு ஜூலை' இனக்கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த கால வடுக்களில் இருந்து மீண்டு நாட்டில் இன நல்லிணக்கத்தை பலப்படுத்தும் நோக்கில் சோசலிச இளைஞர் சங்கத்தின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நேற்று (23.07.2026) மாலை மன்னார் பேருந்து நிலையப் பகுதியில் விசேட துண்டு பிரசுரம் விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை இன கலவரமானது, நாட்டின் வரலாற்றில் அழியாத வடுக்களையும், எண்ணற்ற உயிரழிவுகளையும், சொத்து நாசங்களையும் ஏற்படுத்தியதுடன், நீண்ட கால உள்நாட்டுப் போருக்கும் அடித்தளம் அமைத்தது.
மக்கள் ஒற்றுமையாக வாழ முன்வர வேண்டும்
இத்தகைய துயரமான சம்பவங்கள் மீண்டும் இப்பகுதியில் எக்காலத்திலும் தலை தூக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, கடந்த காலத்தில் ஏற்பட்ட இன ரீதியான முரண்பாடுகள் மற்றும் பிளவுகளை களைந்து, அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடனும் சமத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் துண்டுப்பிரசுரங்கள் பொது மக்களுக்கும் பேருந்து நிலைய பகுதிக்கு வருகை தந்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இனிவரும் காலங்களில் நாட்டில் மக்களுக்கிடையிலும் இனரீதியான மோதல்களோ அல்லது கலவரங்களோ ஒருபோதும் உருவாகக் கூடாது என்ற வலுவான செய்தியை துண்டுப்பிரசுரம் ஊடாக சோசலிச இளைஞர் சங்கம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


