ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்: 26 மனுக்கள் மீதான விசாரணை நிறைவு
முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் வாக்கெடுப்பு அவசியம் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றுள்ளன.
நீதிமன்றத்தின் முடிவு
விசாரணையின் நிறைவில், மனுதாரர்கள் தமது எழுத்துமூல சமர்ப்பணங்களை நேற்று(05.11.2026) மாலை 4 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன்,சட்டமா அதிபர் தரப்பின் எழுத்துமூல சமர்ப்பணங்களை எதிர்வரும் 9ஆம் திகதி தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது.
மனுதாரர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை பரிசீலிக்க முடியும் என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மன்றடியார் நாயகம் விராஜ் தயரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதனையடுத்து, சர்ச்சைக்குரிய சட்ட ஏற்பாடுகளைத் தெளிவுபடுத்தி எழுத்துமூல சமர்ப்பணங்களை சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.