போரதீவுப்பற்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு (Photos)
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாவியினை அண்டிய பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை போரதீவுப்பற்று பிரதேச சபையும், பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.
குறித்த தீப்பரவல் அனர்த்தம் இன்று (12.09.2023) பதிவாகியுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம், போரதீவு, முனைத்தீவு ஆகிய பகுதிகளை அண்டியுள்ள வாவியின் கரையில் உள்ள நாணல் புற்கள் மற்றும் கண்டல் தாவரங்களிலேயே இந்த தீபரவல் ஏற்பட்டுள்ளது.
உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல்
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச சபையின் வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் உதவிகளுடன் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயின் காரணமாக பெருமளவான பறவைகளும் அதனை அண்டி வாழும் விலங்கினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிக்கு வருகை தந்த போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ரங்கநாதன் தீ கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தினை பார்வையிட்டதுடன் குறித்த தீபரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்தும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கையெடுத்துள்ளார்.