வேலணையில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் பெட்டியில் மறைத்து, மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலணை, அராலிச் சந்திப் பகுதியில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், இன்று (31.12.2025) அதிகாலை வேலணை அராலிச் சந்தியில் இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சோதனை நடவடிக்கை
இன்று(31) அதிகாலை 5.30 மணியளவில் புங்குடுதீவு பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட 35 கிலோ மாட்டு இறைச்சியுடன் மோட்டார் சைக்கிளில் மீன் வியாபாரி என்ற போர்வையில் வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மடத்து வெளியைச் சேர்ந்த குறித்த நபர், ஊர்காவற்றுறை போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் குமார தலைமையிலான பொலிஸ் அணியினர் அந்த பகுதியில் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை நடத்தப்பட்ட வேளையில், குறித்த நபரிடம் இருந்த மீன் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலா ஒரு கிலோ நிறைகொண்ட 35 இறைச்சிப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் போக்குவரத்திற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக நடவடிக்கை
இதனையடுத்து, விசாரணைகளின் பின்னர் இன்று குறித்த நபர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வேலணை பிரதேச ஆளுகைக்குள் சட்டவிரோதமான முறையில் மாடுகள் களவாடப்படுவதும் இறைச்சியாக்கப்பட்டு, யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படுவதாகவும் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதுபோன்று பெறுமதி மிக்க வளர்ப்பு மாடுகளும் சூறையாடப்படுவதாகவும் இந்த விடயத்தை கட்டுப்படுத்துவதில் ஊர்காவற்றுறை பொலிஸார் அக்கறை கொள்வதில்லை என்றும் பிரதேச மக்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த நிலையில், குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.