மட்டக்களப்பு தொடருந்து கடவை காப்பாளர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு
மட்டக்களப்பு தொடருந்து கடவை காப்பாளர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது பொலிஸாரின் வாக்குறிதிக்கமைய நிறைவடைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 24 தொடருந்து கடவைகளில் கடமையாற்றும் கடவை காப்பாளர்கள் தமது சேவையினை நிரந்தரமாக்கக் கோரியும் மாத சம்பளத்தினை உயர்த்தக்கோரியும் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
சுமார் 11 வருடங்களாக நிரந்தர நியமனம் இன்றி நாள் ஒன்றிற்கு 250 ரூபாய் சம்பளத்திற்காக கடமையாற்றிவரும் இவர்களை அரசாங்கம் இவர்களை கடமையில் இருந்து நீக்கிவிட்டு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களை குறித்த கடமையில் சேர்த்துக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கும் இதன் போது தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு தமது நாளாந்த ஊதியமான 250 ரூபாய் ஊடாக தமது வாழ்க்கையினை கொண்டு நடத்த முடியாது எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றையதினம்(28) மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் சம்பள உயர்வு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை தற்போது முன்னெடுப்பதாகவும் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததனைத் தொடர்ந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவி்ட்டுள்ளனர்.
இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் தங்களது போராட்டத்தை இதைவிட பாரிய அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் புகையிரத கடவை காப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 கடவைகளில் 72 தொடருந்து கடவை காப்பாளர்கள் இவ்வாறு நிரந்தர நியமனமின்றி கடமையாற்றி வருவதுடன் இலங்கை முழுவதுமாக 688 புகையிரத கடவைகளில் 2064 தொடருந்து கடவை காப்பாளர்களாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |