அம்பாறை - மட்டக்களப்பில் தொடரும் கன மழை: நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் முதலைகள்
புதிய இணைப்பு
அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால், வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருவதால் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நற்பிட்டிமுனை, ஆலையடி வேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன.
இதனால், கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு டெங்கு நோய் பெருகக்கூடிய அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலைகள் நடமாட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் குளங்கள், வாவிகள், ஆறுகளிலிருந்து நீர் நிரம்பிக் காணப்படும் நிலையிலேயே அங்கிருந்து முதலைகள் வெளியேறி மக்களது குடியிருப்புக்குள் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் இன்று காலை முதலையொன்று புகுந்ததனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதேபோன்று நேற்று மாலை திருப்பழுகாமம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மாடு ஒன்றை பிடித்துச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டு செல்லும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
மேலும் குளங்கள், வாவிகள், ஆறுகள், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |