பசிலின் பின்னால் வந்து சந்தர்ப்பம் கோரிய முக்கிய அரசியல்வாதி யார்?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போக்கிடம் இன்றி, பசில் ராஜபக்சவின் பின்னால் வந்து சந்தர்ப்பம் கேட்டதாகவும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன முன்னணியின் முக்கிய மூன்று தலைவர்கள் பல தடவைகள் அழைப்பு மேற்கொண்டதாக மைத்திரி அண்மையில் கூறியதாகவும் அதில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்சவிற்கு, மைத்திரி பல அழைப்புக்களை எடுத்த போதிலும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என ரேணுக பெரேரா தெரிவித்துள்ளார்.
பின்னர், பிரபல பௌத்த பிக்கு ஒருவரின் தொலைபேசி வாயிலாகவே மைத்திரி, பசிலை தொடர்பு கொண்டு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கேட்டார் என தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமாயின் எப்பொழுது வேண்டுமாயினும் வெளியேறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
