உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு உள்ளது: நாணய நிதியத்தை எச்சரிக்கும் முக்கிய ராஜதந்திரி
உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு இருப்பதாக திறந்த சமூக நிதியத்தின் (Open Society Foundations) தலைவர் Mark Malloch-Brown தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டிய விடயம்
சர்வதேச நாணய நிதியம் தனது விஜயத்தின் போது இந்த பிரச்சினையை நிகழ்ச்சி நிரலில் வைப்பதன் மூலம் நாட்டில் இந்த பிரச்சினை இருப்பதற்கான காரணத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அப்படி செய்யவில்லை என்றால், உதவிகள் அத்தியவசியமாக தேவைப்படும் மக்களுக்கு பதிலாக ஊழல் அரசியல்வாதிகள் பிணை எடுப்பதற்கான ஆபத்து இருப்பதாகவும் Brown எச்சரித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் ஊழலான ஆட்சி என பொருளாதார நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டி இருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் Brown இதனை கூறியுள்ளார்.
Sri Lanka has a history of diverting aid. @IMFnews must acknowledge the reason the country is in this mess by putting this issue on the agenda during their visit. Otherwise they risk bailing out corrupt politicians instead of people in need. https://t.co/jlkfUGALiZ
— Mark Malloch-Brown (@malloch_brown) June 22, 2022
அமைப்பு ரீதியான ஊழல், நாட்டின் கடன் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர் நிஷான் டி மெல் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மட்டத்திலான உடன்படிக்கைக்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு தொடர்பான நிகழ்ச்சி நிரலில் இந்த பிரச்சினை உள்ளடக்கப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் தற்போது இலங்கை வந்துள்ளனர். நெருக்கடியை தீர்க்க இலங்கை கடன் மறுசீரமைப்பை எதிர்பார்த்துள்ளது.
இங்கிலாந்து ராஜதந்திரி
இங்கிலாந்தை சேர்ந்த ராஜதந்திரியான Mark Malloch-Brown, கொபி அன்னான்( Kofi Annan) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக பணியாற்றிய காலத்தில், பிரதி செயலாளர் நாயகமாக பணியாற்றினர்.
பிரித்தானிய தொழிற்கட்சியின் முன்னாள் உறுப்பினரான Mark Malloch-Brown 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஆபிரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.