தடை நீங்கிய புலம்பெயர் அமைப்புக்கள் வடக்கு, கிழக்குக்காவது உதவ வேண்டும் - மொட்டுக்கட்சி வலியுறுத்து
"தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்அமைப்புக்கள் நாட்டுக்கு நேசக்கரம் நீட்டலாம். குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கையாவது மேம்படுத்த உதவலாம் என ஆளுங்கூட்டணியின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு, அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே 'மொட்டு'க் கட்சி எம்பியான ஜகத் குமார மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நாட்டுக்கு நேசக்கரம் நீட்டலாம்
"உரிய ஆய்வுகளின் பின்னரே, சில அமைப்புக்கள் மற்றும் நபர்களைத் தடைப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான பரிந்துரையைப் பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ளது. இதில் எவ்வித தவறும் கிடையாது. நாம் உலகுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.
தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நாட்டுக்கு நேசக்கரம் நீட்டலாம். குறைந்த பட்சம் வடக்கு, கிழக்கையாவது மேம்படுத்த உதவலாம்.
சிலவேளை, அந்த அமைப்புக்கள் எமது
நாட்டுக்கு, சட்டத்துக்கு எதிராகச் செயற்பட்டால் மீண்டும் தடை செய்ய முடியும்.
அதற்கான ஏற்பாடுகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.