புலம்பெயர் அமைப்புக்களின் தடை நீக்கம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத தடுப்பு சாசனத்தின் படியே புலம்பெயர்ந்த 6 அமைப்புகளின் தடை நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் இன்று(17) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் தீர்மானங்கள்
மேலும் இந்த அறிக்கையில், ”ஐக்கிய நாடுகளின் தீர்மானங்கள் 1758/19 இன் படி இந்த ஆறு அமைப்புகளின் தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் ஏற்பட்ட
உடன்பாட்டின்படி, அமைப்புக்கள் மீதான தடைகளை நடைமுறைப்படுத்துவதற்கான
தகுதி வாய்ந்த அதிகாரியாக பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி
அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய குழு நியமனம்
இதனையடுத்து வெளியுறவு அமைச்சகம், சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு பிரிவுகள் மற்றும் சட்ட நடைமுறை நிறுவனங்கள் மற்றும் மத்திய வங்கியின் நிதி விசாரணை பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த குழு பல ஆண்டுகளாக புலம்பெயர் அமைப்புக்கள் எப்படி பயங்கரவாதத்திற்கு நிதியளித்துள்ளன என்பதை கண்டறிந்து அவற்றைத் தடைசெய்வதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
தடை நீக்கம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கை
அத்துடன் ஆறு நிறுவனங்கள் மீதான தடைகளை நீக்குவது தொடர்பான கண்காணிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உலகத் தமிழர் பேரவை, அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை, உலகளாவிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரித்தானியத் தமிழர் கூட்டமைப்பு மற்றும் கனடியத் தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றின் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.