ஜனாதிபதி செயலகம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக தகவல்
முற்றுகையிடப்பட்டுள்ள இலங்கையின் ஜனாதிபதி அலுவலகம் இன்று (25) மீண்டும் திறக்கப்படும் என இலங்கை பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கட்கிழமை முதல் அலுவலகம் மீண்டும் திறக்கத் தயாராக உள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். அவர் ஊடகங்களுக்கு பேச அதிகாரம் இல்லாததால், பெயர் வெளியிட மறுத்துள்ளார்.
போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சேகரிக்க தடயவியல் நிபுணர்கள் அலுவலகத்திற்குச் சென்றதாக அவர் AFP செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
மே 9 முதல் நீடித்த முற்றுகை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.எச். கமல் குணரத்ன நேற்று ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன், செயலகம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தை சுற்றி வளைத்துள்ள படையினர்
பொல்லுகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்திய படையினர் கடந்த வெள்ளிக்கிழமை (22) அதிகாலை 92 வருடங்கள் பழமை வாய்ந்த ஜனாதிபதி செயலகத்தை சுற்றி வளைத்துள்ளனர். இந்த நடவடிக்கையில் குறைந்தது 48 பேர் காயமடைந்தனர் மற்றும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது பாதுகாப்புப் படையினர் ஏப்ரல் முதல் வளாகத்திற்கு வெளியே எதிர்ப்பாளர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்களை அகற்றினர். இந்த சம்பவத்திற்கு மேற்குலக அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைக் குழுக்கள் கண்டனம் தெரிவித்திருந்தன.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் நியமிக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சுதந்திரம் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அவர்கள் உத்தியோகபூர்வ எதிர்ப்பு தளத்தில் இருக்க முடியும். நகரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக அரசாங்கம் இன்னும் சில இடங்களைத் திறக்கலாம் என்று தல்துவ ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார்.