பேங்கொக் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு
தாய்லாந்தின்- பேங்கொக்கிற்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றிலும் மற்றும் வீடு ஒன்றிலும் மாணவன் ஒருவனால் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
பேங்கொக்கின் வடமேற்கே உள்ள நொந்தபுரி மாகாணத்தின் 'டெப்சிரின் நொந்தபுரி' பாடசாலையில் வெள்ளிக்கிழமை காலை வேளையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திய 14 வயது மாணவன், பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் தனது வீட்டில் வைத்து தனது தாத்தா மற்றும் பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
பின்னர் பாடசாலைக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பாடசாலை ஊழியர்கள் உயிரிழந்ததுடன், தாக்குதலை நடத்திய மாணவனும் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்ததை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 16 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நடவடிக்கை
இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அம்மாணவனின் தாத்தாவுக்கு சொந்தமான சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட ஆயுதம் எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து தாய்லாந்தில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் உறுதியளித்துள்ளார்.