மூங்கிலாறு சிறுமி மரணம்! திடுக்கிடும் தகவல் வெளியானது(Video)
முல்லைத்தீவு – உடையார்கட்டு வடக்கு – மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்கு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த நேற்று சென்ற நிலையில் அவரின் வாகனத்தை வழிமறித்து மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ். ஜெயகாந்தன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின், மூங்கிலாறு வடக்கில் கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறுமியின் மாமா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதேவேளை, சிறுமியின் பூதவுடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததுள்ளது.
சிறுமிக்குச் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பின் போதே உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது. புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு 200 வீட்டுத் திட்டம் பகுதியில் கடந்த புதன் கிழமை 12 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
15 ஆம் திகதி மகள் தன்னுடன் வீட்டிலிருந்ததாகவும் அயல் வீட்டார் திருகோணமலை சென்றுவிட்டதால், அங்கு எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அணைக்க காலை 6.30 மணியளவில் சென்றதாகவும் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் எல்லா இடமும் தேடிவிட்டு, மதியம் 2 மணிக்குப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
யோகராசா நிதர்சனா என்ற 13 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயிருந்தார். இதையடுத்து, கிராம மக்கள், பொலிஸார், இராணுவத்தினர் தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். ஆடைகள் கலைந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத காணி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனைக்குப்படுத்தப்பட்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சிறுமி 2 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். அதன் காரணமாகச் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட்டபோது ஏற்பட்ட அதிக இரத்தப் பெருக்கு காரணமாகச் சிறுமி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த நிதர்சனா, திருகோணமலையில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் மூங்கிலாற்று பிரதேசத்துக்கு வந்திருந்துள்ளார். 6 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில், யோகராசா நிதர்ஷனா கடைசிப் பிள்ளையாவார்.
விடுமுறைக் காலத்தில் சிறுமி வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில், அக்காவின் கணவரால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, கர்ப்பமாக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
