சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல்போயுள்ளார் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள்
அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களுள் 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும் 22 வயதுடைய இளைஞரும் உள்ளடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்குக் குறுக்கே உள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்
கண்டி மாவட்டம் - நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு
நாவலப்பிட்டி - பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் மற்றுமொரு 67 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளார் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த அனர்த்தங்களால் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.