400 அடி கிணற்றில் விழுந்து 70 மணி நேரமாக உயிருக்கு போராடிய குழந்தை!கண்ணீருடன் தாயார் வெளியிட்ட தகவல்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் 70 மணி நேர போராட்டத்தின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம், பீதுல் மாவட்டத்திலுள்ள மந்தாவி என்ற கிராமத்தைச் சேர்ந்த தன்மே சாஹு என்ற 8 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் 400 அடி ஆழ்துளைக் கிணற்றில் 55 அடியில் சிக்கியிருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மீட்புப்பணிகள் இடம்பெற்று வந்த நிலையில்,70 மணி நேர மீட்புப்பணியின் பின்னர் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
தாயார் வெளியிட்ட தகவல்
இந்நிலையில், மகன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததிலிருந்து மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். அவன் குரலை நாங்கள் கேட்டோம். பின்னர் மாலை 6 மணியளவில் மீட்புப்பணி தொடங்கியது.ஆனால் இறுதியில் பிணமாக மீட்டிருக்கின்றார்கள்.
ஓர் அரசியல்வாதி அல்லது அதிகாரியின் குழந்தை விழுந்திருந்தாலும், இவ்வளவு நேரம் மீட்டிருப்பார்களா?" எனவும் சிறுவனின் தாயார் ஜோதி சாஹு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
மீட்பு படையினர் விளக்கம்
இதேவேளை, மீட்புப்பணியில் தீயணைப்புத்துறையினர், பொலிஸார், ஊர்க்காவல் படையினர் இணைந்து மேற்கொண்ட நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ளனர்.
போர்வெல் இருந்த பகுதி கடினமான பாறையைக்கொண்டதாக இருந்ததுடன்,குழி தோண்டும்போது அதிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளிவந்தமை மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியாமைக்கு காரணம்.
மேலும், தண்ணீரை வெளியேற்றிக்கொண்டே குழி தோண்ட வேண்டியிருந்தது. அதோடு போர்வெல்லுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயன்றோம். ஆனாலும், சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.