சிறுமிகளை ஏமாற்றி அழைத்துச் சென்ற முச்சக்கரவண்டிச் சாரதி கைது
கிளிநொச்சியிலிருந்து காரைநகர் செல்ல வந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று தவறான நடத்தைக்கு முயற்சித்த முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவர் பொலிஸாரால் நேற்று(22.09.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து காரைநகர் செல்லும் நோக்கில் பேருந்தில் வருகை தந்த இரண்டு சிறுமிகள், யாழ்ப்பாணத்தில் இறங்கி காரைநகருக்குச் செல்ல முற்பட்டுள்ளனர்.
அந்தச் சமயத்தில் இரண்டு சிறுமிகள் மீதும் சந்தேகம் கொண்ட சில முச்சக்கரவண்டிச் சாரதிகள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்க முற்பட்டதை அவதானித்த மற்றொரு முச்சக்கரவண்டிச் சாரதி, அதனைச் சிறுமிகளிடம் கூறித் தனது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார்.
முச்சக்கரவண்டியில் ஏற்றியவாறு
பேருந்து நிலையத்திலிருந்து காரைநகருக்குக் கூட்டிச் செல்வதாக ஏமாற்றி அழைத்துச் சென்ற சாரதி, சிறுமிகளை மாதகல் பிரதேசத்தின் ஒரு மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே ஒரு சிறுமியின் ஆடைகளைக் களைந்து துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்தபோது, இரண்டாவது சிறுமி தனது கையில் இருந்த பொருளால் சாரதியைத் தாக்கிவிட்டுப் பலத்த குரலில் கூச்சலிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சாரதி, ஒரு சிறுமியை மட்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றியவாறு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அந்தப் பகுதியில் கூடிய பொதுமக்களிடம் இரண்டாவது சிறுமி நடந்ததைக் கூறியமையைத் தொடர்ந்து, உடனடியாக இளவாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
தகவலறிந்த பொலிஸார் விரைந்து சென்று ஒரு சிறுமியை மீட்டனர். சிறிது நேரத்தில் இரண்டாவது சிறுமியைப் பொலிஸ் நிலையத்தில் இறக்கிவிட முயன்ற முச்சக்கரவண்டிச் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் நேற்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
முச்சக்கரவண்டிச் சாரதி துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டதனால் அவர் பொலிஸாரால் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.