22ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனநாயகத்தை அழிக்கும்.. சஜித் எச்சரிக்கை
அரசமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி தனது முன்னைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக நிற்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
22ஆவது திருத்தமானது ஜனநாயகத்துக்கு விரோதமானதும், அரசியல் மரணதண்டனையை நிறைவேற்றுபவரின் திருத்தமாகவும் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்தார்.
இந்தத் திருத்தமானது நீதிமன்றத்தின் சுயாதீனம், நீதியைப் பெற்றுக் கொடுக்கும் செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதும் பெரும் மரண அடியைக் கொடுப்பதாக அமைந்து காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் சூழ்ச்சி
சுருக்கமாகக் கூறுவதானால், இதனையொரு "அரசியல் அலுகோசு திருத்தம்" என்றும், ஜனநாயகத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சி என்றும் குறிப்பிட்ட அவர், இந்தத் திருத்தத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

"வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற கொள்கைப் பிரகடனத்தில் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசு, நீதிமன்றத்துக்கு மரண அடியை ஏற்படுத்தும் வேலைகளையே செய்து வருகின்றது என்றும் அவர் சாடினார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே சரியான மற்றும் வெளிப்படையான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கொடூரமான தாக்குதலின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் மற்றும் திட்டங்களை வகுத்தவர்களை வெளிக்கொணர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இதற்காகப் பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.