மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை வென்றது ஆஸ்திரேலிய அணி!
ஐசிசி மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி, கேப் டவுன் நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று(26.02.2023) நடைபெற்றது.
இந்த போட்டியில்,தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 19 ஓட்டங்களால் வெற்றியீட்டி அவுஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
6ஆவது சாம்பியன் பட்டம்
மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியா சுவீகரித்த 6ஆவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. ஆரம்ப வீராங்கனைகளாக அலீசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களத்தில் இறங்கினர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் களமிறங்கிய பெத் மூனி, கடைசி வரை களத்தில் நின்று 53 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்ரியுடன் 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 156 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டம்
இதையடுத்து 157 ஓட்டங்களை இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்க அணியின் வீராங்கனைகள் களத்தில் இறங்கினர்.
ஆஸ்திரேலிய அணியின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் திணறினர்.
தொடக்க வீராங்கனை லாரா வோல்வாரிட்டை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
க்ளோ ட்ரையான் மட்டும் 25 ஓட்டங்களை எடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.
லாரா 48 பந்துகளில் 61 ஓட்டங்களை அதிரடியாக சேர்த்தார்.
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்க அணி 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்த இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா தனது சொந்த மண்ணில் வெற்றிபெற்று உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாறு படைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிரடியான ஆட்டத்துடன் இறுதிப் போட்டியில் 19 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தோல்வி அடையாத அணியாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.