நீதித்துறையின் சுதந்திரத்தை ஜனாதிபதியிடம் வலியுறுத்திய சட்டமா அதிபர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் நேற்று(06) நடைபெற்ற சந்திப்பின் போது சட்டமா அதிபர் தரப்பில் நீதித்துறை சுதந்திரம் குறித்து கடுமையான தொனியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கடந்த ஜனவரி 27ஆம் திகதி சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பொதுவெளியில் சட்டமா அதிபரின் தீர்மானம் குறித்து கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டன.
சட்ட மா அதிபர் விளக்கம்
இந்தப் பின்னணியில் நேற்றையதினம்(06) குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சட்டமா அதிபரை ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
நேற்று மாலை நடைபெற்ற குறித்த சந்திப்பில் பொதுமக்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில், அரசாங்க அதிகாரிகள் செயற்பட வேண்டுமென்று ஜனாதிபதி கண்டிப்பான தொனியில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், விடுவிக்கப்படவுள்ள சந்தேக நபர்கள் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் நேரடி தொடர்புடைய சந்தேக நபர்கள் அல்லவென்றும், சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் என்பதையும் சட்ட மா அதிபர் விளக்கியுள்ளார்.
நீதித்துறைக்கு உள்ள சுதந்திரம்
அவ்வாறான நிலையில், போதுமான சாட்சியங்கள் இன்மையால் அவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்டதாகவும், நீதித்துறைக்கு அதற்கான சுதந்திரம் இருப்பதாகவும் சட்டமா அதிபர் கடுமையான தொனியில் தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்துள்ளார்.
எனினும், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, எதிர்வரும் காலங்களில் வழக்குகளில் இருந்து யாரேனும் விடுவிக்கப்படுவதாக இருந்தால் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கலந்துரையாடிய பின்னரே தீர்மானிப்பதற்கு சட்ட மா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ளப்படாத நிலையில், தேவையேற்படும் பட்சத்தில் குறித்த மூவரையும் மீண்டும் சாட்சி விசாரணைகளுக்காக அழைக்கவும் இருதரப்பும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
