முல்லைத்தீவில் ஊடகவியலாளர்களால் முன்னெடுக்கபட்ட கவனயீர்ப்பு போராட்டம்(Photos)
தென்பகுதியில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவு ஊடகவியலாளர்களால் இன்று(04) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.
தென்பகுதியை சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர் பலர் கடந்த (31)ம் திகதி கொழும்பு மீரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன் நடத்திய போராட்டம் தொடர்பில் அறிக்கையிடலுக்காக சென்ற வேளை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நான்கு ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தாக்குதல் நடவடிக்கையை கண்டித்து முல்லைத்தீவு ஊடக அமையத்தினரால் கண்டன அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கை வருமாறு,
எமது சகோதர சிங்கள ஊடகவியலாளர்கள் மீதான மிலேச்சதனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
“தென்பகுதியை சேர்ந்த எமது சகோதர சிங்கள ஊடகவியலாளர் பலர் கடந்த (31)ம் திகதி அன்று கொழும்பு மீரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன் நடத்திய போராட்டம் தொடர்பில் அறிக்கையிடலுக்காக சென்ற வேளை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்துள்ளதோடு நான்கு ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
இலங்கை பாதுகாப்பு தரப்பினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை முல்லைத்தீவு ஊடக அமையத்தினராகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
அத்தோடு மக்களின் ஜனநாயக போராட்டம் தொடர்பில் அறிக்கையிட சென்ற வேளை தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள சகோதர ஊடகவியலார்களுக்கு இந்த நேரத்தில் வடக்கிலிருந்து நாம் எமது ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.
கடந்த காலங்களில் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்கள், அரசுக்கு எதிரான போராட்டங்கள், அரச தரப்பினராலும் அரச ஆதரவு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான செய்திகளை துணிச்சலோடு வெளிப்படுத்தி வந்த தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வந்த நிலையில் அது இன்று எமது சகோதர சிங்கள ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது மனவேதனையளிக்கிறது.
கடந்த காலத்தில் பல தமிழ் ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டும் வலுக்கட்டாயமாக கடத்தி காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் .
இவ்வாறு தமிழ் மக்களின் உரிமை சார் விடயங்களை வெளிக்கொண்டு வரும் தமிழ் ஊடகவியலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்வதும் விசாரணைகளுக்கு அழைத்து ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதும் இந்த ஆட்சியிலும் தொடர்ந்துவரும் நிலையில் தற்போது இந்த ஊடக அடக்குமுறையானது எமது சகோதர சிங்கள ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பல்வேறு ஊடகவியலாளர்கள் மீது இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரால் கொலை ,கடத்தல் ,காணாமல் ஆக்கப்படுத்தல், தாக்குதல் அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் அதற்கான சரியான நீதி விசாரணைகள் உரிய தரப்பினால் முன்னெடுக்கப்படாமையே இலங்கையில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் நிலைக்கு காரணமாக இருந்து வருகிறது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை மீது அரச பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் சுயாதீனமானதும் வினைத்திறனானதுமான ஊடக செயற்பாட்டிற்கு அடிக்கப்பட்டுவரும் சாவு மணியாகும்.
இவ்வாறான பின்னணியில் தற்போது தென்பகுதியில் அதிகரிக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்களை அடக்கும் முகமாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதன் மூலம் அரசுக்கு எதிரான போராட்டங்கள், மனித உரிமைகள் சார்ந்த விடயங்களை வெளிக்கொணர்ந்தால் ஊடகவியலாளர்கள் நசுக்கப்படுவர் என்ற செய்தியை அரசு வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக அரசின் ஊதுகுழலாக செயற்படாது அரசுக்கு எதிரான போராட்டங்கள் மனித உரிமைகள் மீறப்படும் சந்தப்பங்களில் தலையீடு செய்யும் ஊடகவியலாளர்கள் வடக்கு கிழக்கு அன்றி நாடு முழுவதும் தாக்கப்படுவர் என்பதை உணர்த்தும் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் சம்பவத்தினை நாங்கள் பார்க்கிறோம்.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அனைவரும் ஒன்றுபட்டு குரல்கொடுக்க வேண்டிய தேவையை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது
ஊடகவியலாளர்களின் ஊடக பணிக்கு இடையூறு விளைவிக்கும், அச்சுறுத்தல் மேற்கொள்ளும் சித்திரவதைக்கு உட்படுத்தும் அரச பாதுகாப்பு தரப்பினரின் இவ்வாறான தொடர் செயற்பாடுகளை முல்லைத்தீவு ஊடக அமையம் வன்மையாகக் கண்டிப்பதுடன், ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளில் அக்கறையுள்ள உரிய தரப்புக்களும், சர்வதேச அமைப்புக்களும், சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி நிற்கின்றோம்.“ என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.



