யாழில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு (PHOTOS)
யாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டு பணிகள் இன்று காலை நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தன.
அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்காக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், காணி உரிமையாளர்களும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் யசோதா உதயகுமாரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, தனக்கு மேல் இடத்தில் இருந்துவரும் உத்தரவுகளையே தான் நடைமுறை படுத்துவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர்
அ.ஜெபநேசன், பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் கலந்து
கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






