யாழ்ப்பாணத்தை நினைவூட்டும் ஒட்டுசுட்டானில் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி
யாழ்ப்பாணத்தின் பனை வளத்தினைக் கொண்டு கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் சிறுகைத் தொழில் முயற்சி போல் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானிலும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஒட்டுசுட்டானில் பனைப்பொருள் சார்ந்த உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதில் தொடர்ந்து முயற்சித்து வரும் பயனாளிகள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
எனினும், சந்தைப்படுத்தல் வாய்ப்புக்கள் குறைவாக இருப்பது அவர்கள் எதிர்கொள்ளும் பெரும் சவாலாக இனம் காண முடிகின்றது.
இதனால் பனைப்பொருள் சார்ந்த உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட்டுவரும் ஆர்வம் அவர்களிடையே குறைவாக இருப்பதையும் இங்கே குறிப்பிடல் பொருத்தமானதாகும்.
போதியளவிலான அரச ஆதரவு இருந்தும் பனைப்பொருள் உற்பத்திகளில் பெரு வெற்றி அடைய முடியாதது கவலைக்குரிய விடயம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முயற்சியாளர்களின் கருத்துக்கள்
'சிறு வயதில் இருந்தே பனைப்பொருள் உற்பத்திகளில் எனக்கு ஆர்வம் இருந்தது. வீட்டில் உள்ள உறவினர்கள் பலரும் இப்பொருட்களை உற்பத்தி செய்வதில் கைதேர்ந்தவர்கள். இதனால் நானும் இவற்றைப் பழகிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது" என இப்போதும் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுவரும் முயற்சியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
'பனை வளம் நிறைந்துள்ள இடமாக ஒட்டுசுட்டான் மற்றும் அதனைச் சூழவுள்ள இடங்கள் அமைந்துள்ளன. இதனால் பனைப்பொருள் சார்ந்த உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.
தனக்கு 12 வயது இருக்கும் போதே தன்னால் பனையோலைகளைக் கொண்டு ஆக்கக்கூடிய கைவினைப் பொருட்களான நீத்துப் பெட்டி, இடியப்பத்தட்டு, கடகம் போன்றவற்றை செய்து கொள்ள முடிந்தது" என மற்றொரு உற்பத்தியாளர் குறிப்பிட்டிருந்தார்.
உற்பத்திப் பொருட்களை உள்ளூரிலும் வெளியூரிலும் சந்தைப்படுத்தக் கூடியதாக இருந்த போதும் போதியளவில் வருமானம் கிடைப்பதாக இருக்கவில்லை.இதனால் இந்தத் துறையில் இருந்த ஆர்வம் தமக்கு குறைந்து வருவதாகவும் உற்பத்திகளில் ஈடுபட்டுவரும் முயற்சியாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.
சந்தைப்படுத்தலில் தோல்வி
உற்பத்தியாளர்களிலும் பார்க்க விற்பனையாளர்கள் அதிக இலாபம் பெறும் வகையில் சந்தைப்படுத்தல் சூழல்கள் இருப்பதனை அவதானிக்கலாம்.
மூலப்பொருளுக்கான செலவு, உற்பத்திக்கான நேர விரயம் மற்றும் வாழ்வியலுக்கான நிதியீட்டம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு உற்பத்தியில் ஈடுபடும் போது கொள்வனவாளர்கள் குறைந்த விலைக்கு வாங்கி கூடிய விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
ஒரு நீத்துப்பெட்டியினை ரூபா 30இற்கு வாங்கி ரூபா 60இற்கு விற்பனை செய்கின்றனர். வியாபாரிகளுக்கு கிடைக்கும் இலாபம் ரூபா 30 மட்டும் ஆகும் போது உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் இலாபம் ரூபா 30இலும் குறைவானதாகவே இருக்கின்றது.
சந்தைப்படுத்தலின் போது ரூபா 30இற்கு கொடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உற்பத்திச்செலவு, நேரவிரயம், உற்பத்தியாளருக்கான இலாபம் என்பன உள்ளடக்கியிருக்கும் போது வாங்கி விற்கும் வியாபாரிகள் இலாபமாக மட்டும் ரூபா 30 பெற்றுக்கொள்ளும் சூழல் நிலவி வருவதனை சுட்டிக்காட்டிய பனைப்பொருள் சார்ந்த உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யும் முயற்சியாளர் ஒருவர் இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரூபா 50இற்கு வாங்கி ரூபா 60இற்கு விற்கும் போக்கே உற்பத்தியாளர்களாகிய தமக்கு சாதகமானது. அதேவேளை, வாங்கி விற்கும் வியாபாரிகளுக்கும் இலாபமாக ரூபா 10 கிடைக்கின்றது.
உரியளவு இலாபம்
ஆனாலும் இத்தகைய சூழலை பேண முடியவில்லை. இந்த சூழலை உருவாக்கிக்கொள்வதற்காக உரிய அதிகாரிகளும் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்க முற்படவில்லை.
உற்பத்தியாளராகிய நாங்கள் இந்த அணுகுமுறை இருப்பதால் வறுமையை நோக்கிச் செல்ல நேரிடுகின்றது. இந்த தொழில் முயற்சியை விட கூலிக்கு வேலைக்குப் போனால் கூட அதிகமாக உழைக்கலாம் என பனைபொருள் சார்ந்த உற்பத்தியாளர் ஒருவர் தமக்குள்ள சந்தைப்படுத்தல் இடர்பாட்டினை விளக்கியிருந்தார்.
உரியளவு இலாபத்தினைப் பெற்றுக்கொள்ள நுகர்வோருக்கு நேரடியாகவே தாம் விற்பனையில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரச ஆதரவு
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினால் பனைப்பொருள் சார்ந்த உற்பத்திப் பயனாளிகளுக்கு பயிற்சி வகுப்புக்கள் வழங்கப்பட்டதோடு வழிகாட்டல்களை வழங்கி வருவதாக பயனாளியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆலயத் திருவிழாக்கள் மற்றும் வாராந்த சந்தை போன்றவற்றில் பனைப்பொருள் சார்ந்த உற்பத்திகளை விற்பனைக்காக காட்சிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
சுயதொழில் முயற்சியாக பனையோலை மற்றும் பனம் மட்டைகளைப் பயன்படுத்தி நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்யும் பயிற்சி வகுப்புக்களை வழங்குதல் பாராட்டக் கூடிய செயற்பாடு என சமூகவிட ஆய்வாளர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
எனினும், உற்பத்தியாளர் எதிர்நோக்கும் சவாலான சந்தைப்படுத்தல் வசதியினை ஏற்படுத்திக் கொடுக்கவும் அவர்கள் முன்வரவேண்டும்.
பயிற்சி வகுப்புகள்
நிறுவனமயப்படுத்தி உற்பத்திக்கான அடையாளமொன்றை (brand) உருவாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் இந்த சிக்கலைத் தவிர்க்க முடியும்.
சிறுதொழில் முயற்சிகளுக்கான பயிற்சி வகுப்புக்களை வழங்கும் போது அந்த முயற்சியின் உற்பத்திகளை நிறுவனமயமாக்கல் முறைமையில் சந்தைப்படுத்தலையும் சந்தைப்படுத்தல் நுட்பங்களையும் சேர்த்து பயிற்சியளித்தால் அவர்களது முயற்சிகளை முழுமைப்படுத்தக்கூடியதாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பயிற்சி வகுப்பும் வருமானம் ஈட்டக்கூடிய புதிய சமூகத்தினை உருவாக்குவதற்கான ஆரம்பமாக அமைய வேண்டும்.
அடுத்தடுத்த சந்ததிக்கு பயிற்சி பெற்றவர்களே பயிற்சியளிக்கும் வகையில் பயிற்சியளித்தலையும் வருமானம் ஈட்டும் முறையில் திட்டமிட வேண்டும். எங்கும் எதிலும் வணிக நோக்கும் பொருளீட்டும் வாய்ப்பும் இருக்க வேண்டும் என பயிற்சியாளர்களின் மனநிலையில் வலுவான எண்ணக்கருக்களை விதைப்பதாக இருக்க வேண்டும்.
அத்தகைய பயிற்சி வகுப்புக்களே நாட்டையும் நாட்டு மக்களையும் வளமிக்க சூழலுக்கு இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.
யாழ்ப்பாணத்தின் பாரம்பரியம்
யாழ்ப்பாணத்து மக்களின் பாரம்பரியமிக்க செயற்பாடுகளில் பனைப்பொருள் சார்ந்த உற்பத்திகளும் ஒரு கூறாக இருப்பதாக யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ஒட்டுசுட்டானை வாழ்விடமாகவும் கொண்ட முதியவர் ஒருவர் தன் அவதானிப்புக்களை இங்கு பகிர்ந்து கொண்டுள்ளார்.
“ஒட்டுசுட்டான் மக்களிடையே பனங்கிழங்கு உற்பத்தி மற்றும் ஒடியல் உற்பத்தி இருக்கின்றது. பனையோலை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதுபோல பனம் பழம் கொண்டு உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருவதை நான் அவதானிப்பதாக” அவர் குறிப்பிட்டார்.
பனாட்டினை உற்பத்தி செய்வதற்காக பனையோலையில் பாய் இழைத்து அதன் மீது பனங்கழியினை பரப்பி பனாட்டு உற்பத்தி செய்வார்கள் என பனாட்டு உற்பத்தியினையும் அவர் நினைவு மீட்டியிருந்தார்.
போருக்கு முன்னரான காலத்தில் பனங்கட்டி பனாட்டு உற்பத்தியிலும் பனையோலைப்பாய் உற்பத்தியிலும் மக்கள் ஆர்வமாக இருந்ததாகவும்.இவையெல்லாம் யாழ்ப்பாணத்தினை தனக்கு நினைவூட்டுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போது பனம்பொருள் பாரம்பரிய உற்பத்திகளில் ஈடுபடுவதும் பயன்படுத்துவதும் அரிதாகிப் போய்விட்டது என தன் கவலையினையும் வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |