தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது..! விடுக்கப்பட்ட வேண்டுகோள்
தமிழ் மக்கள் எதிர்வரும் 14ஆம் திகதி (14.11.2024) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலே (Parliament Election) யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து கவனத்தில் எடுக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “தமிழ் மக்கள் முன் எப்போதையும் விட இம்முறை கவனமாகச் செயற்பட வேண்டியுள்ளது.
தேர்தலில் போட்டியிடுகின்றவர்களுள் தமிழ்த் தேசிய அபிலாசைகளைக் கட்சிக் கொள்கைகளாகக் கொண்ட, மறைமுகமாகவேனும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிராத ,சிங்கள அரசின் கைக்கூலிகளாக இயங்கிக் கொண்டிராத தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள கட்சிகள் சிலவே உள்ளன.
தமிழ்த் தேசிய அரசியல்
சில கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் தேர்தல் வந்தால் மட்டுமே தமிழ்த் தேசியத்தைப்பற்றிப் பேசுவர். தேர்தல் மேடைகளில் மட்டும் சமஷ்டியே தீர்வு, தமிழ் மக்களுக்கெதிராக இன அழிப்பு நடைபெறுகிறது, சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறுவர்.
பின்னர் கதிரைகள் கிடைத்ததும் வேடங்களைக் கலைநத்து ஒற்றையாட்சிக்குட்பட்டும் 13ம் திருத்தத்துக்குள்ளும் தீர்வைத் தேடுபவர்களாகவும்,இன அழிப்பு நடைபெறவில்லை என்றும் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும் ஒற்றையாட்சிக்கான ஒத்தகருத்துச் சொல்லுக்கு புது வியாக்கியானமளித்தும் அரச ஒத்தோடிகளாக மாறுவர்.
இத்தகைய வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.
ஆகவே தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான தெரிவை அனுபவ அறிவினூடாக செய்யும் போது போட்டியிலுள்ள மிகச் சில கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலுக்கும் அபிலாசைகளுக்கும் எப்போதும் விசுவாசமாகச் செயற்படுபவர்களாக இருப்பர்.
எனவே தமிழ்த் தேசிய அரசியற் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது தடுமாற்றமேதுமின்றி தொடர்ந்து உயரிய உறுதியுடன் நிற்கும் கட்சிகளுக்கு உங்கள் வாக்குகளை வழங்க வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |