அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் சக்தி தேசிய மக்கள் சக்திதான் என்றும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டம் வவுனியா நகரசபை விளையாட்டுமைதானத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், எமது நாடு எல்லா வகையிலும் பிளவுபட்டுள்ளது, இந்த பிளவுகளால் எமது நாடு முன்னோக்கி செல்ல முடியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் பிளவுபட்ட யுகம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.
ஜனாதிபதி தேர்தலின் போது நாம் பலமான இயக்கம் என்பது வடக்கு மக்களுக்கு தெரியாது. அதனால் தான் பழைய அரசியல் கட்சியையே தெரிவு செய்தனர்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு அதிகமான வேலைகளை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக தேசிய மக்கள் சக்தி கொண்ட அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.
அனைத்து மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசியல் இயக்கமாக ஒன்றிணைவதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.
பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்படும். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை, வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருக்கின்றன. அந்தக் காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு நாங்கள் வழங்குவோம். எங்களுக்குத் தெரியும் இங்கு யுத்தம் ஒன்று நடந்தது. பல்வேறு அநீதிகளுக்கு முகம் கொடுத்தோம்.
இன்று அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய விரைவில் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதியளிக்கிறேன். இது சமத்துவமான ஒற்றுமையான ஆட்சி. இதனை தென்பகுதி எதிர்க்காது.
பிரிவினை அரசியல்
ஆனால் அன்று அப்பிடி அல்ல. வடக்கில் இவ்வாறு ஒன்று நடந்தால் தென்பகுதி அதற்கு எதிராக இருந்தது. எங்களை பிரித்து அரசியல் செய்தார்கள். நாங்கள் இன்று அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். வடக்கின் மீன் வளத்தை பெரிய அளவில் வேறு நாடுகள் வந்து சூறையாடுகின்றன. எமது மீன்வளம் அழியும்வாறாக அதனை செய்கின்றனர்.
நாங்கள் அரசு என்ற வகையில் எமது கடற்றொழிலாளர்களின் உரிமைக்காக வடக்கில் வாழும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். சூரியஒளி இன்று மதிப்பு வாய்ந்துள்ளது. அது எமதுசக்தி.
அதனை துண்டு துண்டாக விற்பதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டும். இந்த வளங்களை நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும். கேரளா கஞ்சா உட்பட போதைப்பொருள் பிரச்சனை இங்கு இங்கு இருக்கிறது. மன்னார் உள்ளிட்ட கடல் ஊடாக அவை வருகின்றன. அவற்றை தடுக்க வேண்டும்.
எனவே, புதிய ஒரு நிலைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்லவேண்டும். அத்துடன் எமது முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயம் இருக்கும். அதேபோல் கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய் மானியம் அதிகரிக்கப்படும். அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்படும். அது பலருக்கு கிடைக்காது அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனை மீள் பரிசீலனை செய்வோம்.
பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ஜனவரியில் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய நிதி வழங்குவோம். விவசாயிகளின் உரமானியத் தொகை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கிராமய விவசாயத்தை முன்னேற்றுவோம். மக்களின் வறுமையை ஒழிப்போம். மக்களது வறுமையை ஒழித்து கிராமிய பொருளாதாரத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்புவோம்.
எமது ஆட்சி 3 மாதம், 6 மாதம், 1 வருடம் என கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் சொல்கின்றோம் இந்த நாட்டை கட்டியெழுப்பும் வரை எமது ஆட்சி தொடரும். ராஜபக்ச, பிரேமதாச, ஜே.ஆர், விக்ரமசிங்க, பண்டாரநாயக்க என மேட்டுக் குடியிடம் இருந்த ஆட்சி அதிகாரம் தற்போது மக்களிடம் வந்துள்ளது. இந்த மாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் புலம்புகிறார்கள்.
இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். அவர்களுக்கு நான் ஒரு சவால் விடுக்கின்றேன். முடிந்தால் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கை விட ஒரு வாக்கு அவர்கள் கூட பெற்றுக் காட்டட்டும்.
ஆனால் எமது தேசிய மக்கள் சக்தி அதை விட அதிக வாக்குகளை பெறும் என கூறுகின்றேன். நவம்பர் 14ஆம் திகதி மிளகாய் தூள்களுடனும், கத்திகளுடனும, நாடாளுமன்றம் வந்து சண்டை போட்டவர்களையும், ஊழல் வாதிகளையும் களைய நாடாளுமன்றத்தை சிரமதானம் செய்து கழுவி சுத்தம் செய்து திசைகாட்டியால் நிரப்பி இந்த நாட்டை மக்கள் எதிர்பார்க்கும் ஒரு நாடாக மாற்றிக் காட்டுவோம்” என்றார்.