'வடக்கு - கிழக்கு தமிழர்களும் தமிழ்த் தேசிய அரசியலும்' ஊடகங்கள் எவ்வாறு அறிக்கையிட்டன..!
பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்துள்ள போதிலும் நாட்டில் வழமை போன்று தேர்தல் அனல் மற்றும் தேர்தல் சலசலப்பு ஏற்படவில்லையெனவே தென்படுகின்றது.
தென்னிலங்கையில் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு சுயேட்சைக் குழுவோ தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபாடு செலுத்தவில்லை என்பதுடன், கடந்த காலங்களில் போன்று ஒருவரை ஒருவர் சாடுதல், தேர்தல் சட்ட மீறல், வன்முறை போன்ற விடயங்கள் தொடர்பில் ஏற்படும் குற்றச்சாட்டுகள் இம்முறை அதிகளவில் கேட்கக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியலில் சில குழப்பங்கள்
புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவிலான மக்கள் திரள்வார்கள் என்ற நம்பிக்கையினாலும், எதிர்க்கட்சிகள் மத்தியில் காணப்படும் தாங்கள் பெறும் வாக்குகள்/மக்கள் ஆணை பற்றிய பாதுகாப்பின்மையினாலும், தென்னிலங்கையில் இம்முறை ஒப்பீட்டளவில் இவ்வாறானதொரு தேர்தல் கலாசாரத்தை இதற்கு முன்னைய தேர்தல்களின் போது நாம் அனுபவிக்கவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
இதேவேளை, வடக்கில் தமிழ் அரசியலில் இன்னும் சில குழப்பங்கள் மற்றும் சலசலப்புகளுடன் கூடிய நிலைமையே தொடர்கின்றன.
தற்போது தமிழ்க் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை காணப்படுவதால், தமிழ் தேசிய அரசியலின் நோக்கங்கள் வெகுவாகப் பரவலான தன்மையை அல்லது உறுதியற்ற தன்மையைப் அடைந்துள்ளன என்றே கூறவேண்டியுள்ளது.
தமிழ்ப் பத்திரிகைகளை அவதானித்த போது குறித்த நிலைமையைப் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. மேலும், ஒரு சில தென்னிலங்கை செய்தித்தாள்களும் மேற்குறித்த நிலைமையை உறுதிப்படுத்தி செய்தி அறிக்கையிட மறக்கவில்லை.
பொது செயலாளரை நியமிப்பது
தமிழ் அரசியல் சூழலில் உருவாகியுள்ள குழப்ப நிலை குறித்து தமிழ்ப் பத்திரிகைகளில் செய்தி அறிக்கையிட்டுள்ளமை தொடர்பில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு இரண்டு முக்கிய விடயங்களை அவதானிக்க கூடியதாக இருந்தது.
தேர்தல் பிரசாரத்துடன் இணைந்து எழுந்துள்ள சர்ச்சைக்குரிய சூழ்நிலையைச் செய்தியாக வெளியிட்டமை முதல் விடயமாக கருதுவதுடன். இரண்டாவது விடயம், தமிழ் அரசியல்வாதிகளிடையே நிலவும் ஒற்றுமையின்மையினால், தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்குச் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தமிழ் தேசிய அரசியல் பலத்தைக் கட்டியெழுப்ப முடியுமா இல்லையா என்ற நிச்சயமற்ற நிலையில், அந்த நெருக்கடியிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பான விடயம், மற்றும் அது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் அரசியல் கருத்துக்கள் எனத் தமிழ் பத்திரிகைகளில் அறிக்கையிடப்பட்ட பல்வேறுபட்ட பார்வையிலான செய்திகள்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, ப.சத்தியலிங்கம் உட்பட கட்சியின் நிர்வாகத்திற்கு எதிராக அந்தக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராஜாவினால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தமை தொடர்பில் செய்தி அறிக்கையொன்று ஒக்டோபர் 15ஆம் திகதி காலைக்கதிர், ஈழநாடு, புதியசுதந்திரன், காலைமுரசு ஆகிய பத்திரிகைகளின் முதற்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.
இச்செய்தி ஒக்டோபர் 16 ஆம் திகதி ஐலண்ட் நாளிதழின் முதல் பக்கத்திலும், ஒக்டோபர் 17 ஆம் திகதி மவ்பிம நாளிதழின் பதினோராவது பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு அறிக்கைகளிலும் தி ஐலண்ட் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியான செய்தி அறிக்கை சற்று விரிவானதாக அமைந்திருந்தது.
இதேவேளை, ஒக்டோபர் 15ஆம் திகதி, தினமின மற்றும் திவயின பத்திரிகைகளில் முறையே 3ஆம் மற்றும் 11ஆம் பக்கங்களில் இரு வெவ்வேறு நிருபர்களின் பெயருடன் ஒரே நிகழ்வு, ஒரே அறிக்கை வெவ்வேறு தலைப்புச் செய்திகளுடன் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தினமின நாளிதழில் வெளியான செய்தியின் தலைப்பு “தமிழரசு கட்சிக்குப் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்கான நான்கு சுற்று பேச்சு வார்த்தைகளும் தோல்வியைச் சந்தித்தது”.
அந்த இரண்டு அறிக்கைகளிலும், தமிழ் அரசுக்கட்சியின் பொது செயலாளரை நியமிப்பதற்காக இடம்பெற்ற பயனளிக்காத நான்கு சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒக்டோபர் 13ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாவது பேச்சுவார்த்தையிலும் பொதுச்செயலாளர் ஒருவரை நியமிக்க முடியவில்லை என்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எந்தவொரு தமிழ் நாளிதழ்களிலும் இடம்பெறவில்லை
உட்கட்சி நெருக்கடி குறித்தும் அந்த செய்தி அறிக்கைகளில் விவரிக்கப்பட்டிந்தது. இரண்டு நாளிதழ்களின் செய்திகளும் ஒரே உள்ளடகத்தை கொண்டிருந்தாலும்கூட, திவயின நாளிதழின் தலைப்பு பின்வருமாறு அமைந்திருந்தது. “தமிழ் அரசுக் கட்சியின் நான்கு பேச்சு வார்த்தையும் பூஞ்சணம் பிடித்ததுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தையும் சிக்கலில் முடிவுற்றது”
மேலும் குறித்த தலைப்பானது தினமின நாளிதழின் தலைப்புச் செய்தியுடன் ஒப்பிடுகையில் ஒரு வகை கிண்டலான வார்த்தையாகத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
அந்த நாளிதழ்களில் வெளியான இரு செய்திகளின் உள்ளடக்கமும் ஒரே மாதிரியாகக் காணப்பட்ட போதிலும், குறித்த இரு செய்தி அறிக்கைக்கும் இருவகையான தலைப்புக்களை இடுவதன் மூலம் மாத்திரம் குறித்த செய்திகளின் கருத்தியலை மாற்றி அமைக்க முடியும் என்பதற்கு திவயின பத்திரிகை பயன்படுத்தியுள்ள தலைப்பானது சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.
வியத்தகு விடயம் என்னவெனில், தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கான தோல்வியைச் சந்தித்த ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஒக்டோபர் 13 ஆம் திகதி இடம்பெற்றமை தொடர்பில் சிங்கள மொழி பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்த போதிலும் அதனை அண்டிய தினங்களில் குறித்த கட்சியின் பேச்சுவார்த்தைகள் ஐந்தும் தோல்வியில் முடிவுபெற்றது என்ற செய்தியானது நாம் ஆய்விற்கு உட்படுத்திய எந்தவொரு தமிழ் நாளிதழ்களிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மக்கள் தமிழ் தேசிய எழுச்சியை விரும்பினால் அவர்கள் முதலில் செய்யவேண்டியது, தமிழரசுக் கட்சியை அரசியல் பரப்பிலிருந்து அகற்ற வேண்டும் எனத் தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ள செய்தி அறிக்கை, ஈழநாடு பத்திரிகையின் பக்கம் 7ல் வெளியாகியது.
அத்துடன், கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி காலைக்கதிர் பத்திரிகையின் முதற்பக்கத்தில் தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மை பற்றி விவரிக்கும் மற்றுமொரு செய்தி வெளியாகியுள்ளது.
"வடக்கு கிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் கிடைப்பதே இப்போதுள்ள பெரும் கேள்வி" இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்ததாக மேற்குறிப்பிட்ட தலைப்பிட்ட செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை இல்லாத காரணத்தினால் வடக்கு கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைப்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆசனங்களைப் பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்த செய்திகளுக்கு மேலதிகமாக, அந்த நெருக்கடியிலிருந்து விடுபடத் தமிழ் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்ற பேச்சும் தமிழ் நாளிதழ்களின் பக்கங்களில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் 17ஆம் திகதி காலைக்கதிர், ஈழநாடு, தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் முறையே 5, 7, 16 ஆகிய பக்கங்களில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளரான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்த அறிக்கையை வெளியிட்டிருந்தன.
தென்னிலங்கையில் எவ்வாறான அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களின் நலன்களுக்கு ஊறு விளைவிக்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதே அவரின் கருத்தாகும்.
ஊழலை ஒழிக்கும் புதிய அரசியல் மட்டுமல்ல, தமிழ் மக்களின் தேசியத்தை அங்கீகரிக்கும், தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கக்கூடிய அரசியலும் வேண்டும் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தமிழ்த் தேசிய அரசியலைக் கட்டியெழுப்ப யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பு குறித்த கட்டுரை காலைக்கதிர், ஈழநாடு ஆகிய நாளிதழ்களின் முதற்பக்கத்தில் “தமிழ்த் தேசியப் போலிகளை முற்றாகத் துடைத்தெறிவோம்” என்ற தலைப்பில் அக்டோபர் 19 ஆம் திகதி அன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும் அரசியல் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியல் நடைமுறையை முன்னெடுத்த தமிழ் தேசிய போலிகளைத் துடைத்தெறிந்து புதிய தமிழ் தேசிய அரசியற் பண்பாட்டை உருவாக்குவதே தமிழ் மக்கள் செய்ய வேண்டிய உண்மையான மாற்றம் என்பதே அவர்களின் பிரதான கருத்தாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புகளை தமிழ் அரசியலிற்கு மாறாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும் என்றும் அந்தக் செய்தி அறிக்கையில் அவர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.
ஒக்டோபர் 16 ஆம் திகதி பல தமிழ் பத்திரிகைகளில் அதாவது காலைகதிர், காலைமுரசு, ஒக்டோபர் 17 ஆம் திகதி தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் முதல் மற்றும் மூன்றாம் பக்கங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா வடக்கின் அதிகாரபகிர்வு தொடர்பாகத் தெரிவித்த கருத்து பிரசுரமாகியிருந்தது.
வடக்கு மக்களுக்குத் தென்னிலங்கை மக்களிடமிருந்து மாறுபட்ட பல பாரிய பிரச்சினைகள் இருப்பதாகவும், கல்வி, விவசாயம், சுகாதாரம், நிலம், மொழிப்பிரச்சினைகளை தீர்க்க வடபகுதி மக்கள் விரும்புவதாகவும், மாறாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தை வடக்கு மக்கள் கேட்கவில்லையெனவும் டில்வின் சில்வா தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ் நாளிதழ்களில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அடுத்தடுத்த நாட்களில் கட்டுரைகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
இனவாதத்தை முன்னிறுத்தி வாக்குகளைக் கவர்வது
“மக்கள் விடுதலை முன்னணியின் புதிய முகம் மற்றும் கொள்கைகளின் அடையாளம் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க அவரே ஆவார்.
அதனால்தான் அவரது தேர்தல் அறிக்கை தமிழர்கள்குறித்து ஒப்பீட்டளவில் முற்போக்கான அம்சங்களைக் கொண்டிருந்தது.
ஆனால், ஜேவிபிக்குள் பழைமைவாதச் சிந்தனைகளின் செல்வாக்கு இன்னமும் உயர் மட்டத்தில் இருக்கின்றது என்பதையும். அது சிங்கள இனவாதத்தை முன்னிறுத்தி வாக்குகளைக் கவர்வதில் தொடர்ந்தும் தீவிரமாக இருக்கின்றது என்பதையும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வாவின் கருத்து வெளிப்படுத்தியுள்ளது"- இது தொடர்பில் அக்டோபர் 16ஆம் திகதி காலைக்கதிர் நாளிதழில் 4ம் பக்கத்தில் வெளியான செய்தியின் ஒரு பகுதியே மேல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினம் காலைமுரசு பத்திரிகையின் 9வது பக்கத்தில் வெளியான கருத்துக் கட்டுரை ஒன்றில் டில்வின் சில்வாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தென்னிலங்கையில் ஆட்சிக்கு வரும் இடது சாரி, வலது சாரி போன்ற கட்சிகளின் சித்தாந்தம் எதுவாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை மாற்ற முடியாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் அவ்வப்போது நாட்டுக்கு எடுத்துரைத்தாலும் அந்தக் கோரிக்கைகள் தமிழ் அரசியல்வாதிகளின் விருப்பங்கள் மாத்திரமே எனவும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கமும் கடந்த காலத்தில் சிங்கள தலைமைகளைப் போன்று பாசாங்குத்தனமாகச் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் முஸ்லீம் மக்களின் கலாசார உரிமைகள்
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி காலைமுரசு பத்திரிகையின் முதற்பக்கத்தில் ‘சகலருக்கும் சம உரிமை’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், “தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லையென டில்வின் சில்வா தெரிவித்தமை தொடர்பாகத் தான் கேள்விப்படவில்லை.
இலங்கையில் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்" எனத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க வவுனியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் முஸ்லீம் மக்களின் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் எனவும், அதற்காக மக்கள் கோரும் 13வது அரசியலமைப்புத் திருத்தம் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு போதாது என்பதால் தேசிய மக்கள் சக்தியின் புதிய அராசங்கம் புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவந்து குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினம், ஈழநாடு நாளிதழின் 4 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக் கட்டுரையில், ரில்வின் சில்வாவின் அறிக்கை விமர்சிக்கப்பட்டுள்ளது.
13வது திருத்தம் தமிழ் மக்களால் கோரப்படவில்லை, தமிழ் அரசியல்வாதிகளால் கோரப்படுகிறது என்ற கருத்து இன்று நேற்றல்ல, சிங்கள தேசியவாதிகளின் அரசியல் நகர்வுகளால் நீண்டகாலமாக நிலவி வருவதாக அதில் குறிப்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்கட்டுரையில், ஊழல்வாதிகள் மற்றும் இனவாதிகள் அரசியலிலிருந்து விலக்கி வைப்பதில் வெற்றிபெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் சிலர் குறிப்பிட்டுள்ள போதிலும் இனவாதிகள் அரசியலிலிருந்து விலகி இருப்பது மாத்திரம் போதுமானதாக அமையாது என்பதுடன் அவர்கள் குறிப்பிடும் வெற்றிக்கு அர்த்தத்தைக் கொண்டு வரக் வேண்டுமாயின் அந்த இனவாதிகளினால் சிங்கள மக்கள் உள்வாங்கியுள்ள பிழையான கருத்துக்கள் கலைந்தால் மாத்திரமே முழுமையான வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகும் இவ்வாறான அனைத்துக் கட்டுரைகளிலும் காணப்படுகின்ற ஒரு பொதுவான பண்பை இங்குக் குறிப்பிட வேண்டும்.
அதாவது தேசிய மக்கள் சக்தியின் அரசால் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்த மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போனது போன்ற தோற்றம் அந்தக் கட்டுரை ஒவ்வொன்றிலும் பொதிந்திருந்தது.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் காலப்பகுதியில் தமிழ் நாளிதழ்களின் உள்ளடக்கத்தை ஆராயும்போது தமிழ் மக்கள் தமக்கான நீதி கிடைக்கும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதை காணமுடிந்தது.
ஆனால், கடந்த அரசாங்கங்களைத் போன்று ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் முன்மொழிவுகளை புதிய அரசாங்கம் நிராகரித்தமை மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் உயர்மட்டத் தலைமையின் அறிக்கைகள் போன்ற பிரச்சினைகளால் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்த எதிர்பார்ப்புகள் படிப்படியாகக் குறைந்து கொண்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அரசியல் வெளியின் மந்தமான தன்மை
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிக்கை தொடர்பில் தமிழ்ப் பத்திரிகைகளின் பக்கங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தென்னிலங்கையில் சிங்களப் பத்திரிகை ஒன்றில் மாத்திரமே இது தொடர்பான செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது.
ரில்வின் சில்வா தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய செய்தி ஒக்டோபர் 20ஆம் திகதி மவ்பிம பத்திரிகையில் 2ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
“புதிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக அவ்வப்போது கூறுகிறது, ஆனால் தேசிய மக்கள் சக்தியின் பிரதான நபர் ஒருவர் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவ்வாறான யோசனையைக் கொண்டிருந்தால், தமிழ் மக்களின் கோரிக்கைக்கு அமைய தீர்வை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாது எனக் கஜேந்திரகுமார் இங்குக் குறிப்பிடுகின்றார்.
அதனால்தான் ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என்று அவர் மேலும் கூறினார்." என்பதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.
கடந்த வாரத்தில், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் வடக்கு மற்றும் தென்னிலங்கை பத்திரிகை பக்கங்களில் எழுதப்பட்டிருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் பொதுத்தேர்தலின்போது தென்னிலங்கை சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் தமிழ் மக்கள் அல்லது அந்த மக்களின் அரசியல் தொடர்பாகச் குறைந்த அளவிலேயே செய்தி அறிக்கையிடப்பட்டிருந்தது.
எண்ணிக்கையில், இது பத்துக்கும் குறைந்த செய்தி அறிக்கைகள் ஆகும். அத்துடன் தமிழ்ப் பத்திரிகைகளில் ஜனாதிபதித் தேர்தல் காலத்தைப் போன்று பரவலாகத் தமிழ் அரசியல் தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை.
வெற்றி தோல்வியை முன்கூட்டியே தீர்மானித்ததன் காரணமாக நாட்டின் அரசியல் வெளியின் மந்தமான தன்மை நாளிதழ்களின் பக்கங்களில் பிரதிபலிக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம்.
கட்டுரை - சுபாஷினி சதுரிகா
மொழிபெயர்ப்பு - ரிக்சா இன்பாஸ்
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 08 November, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.