எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்: $112ஐ தாண்டியது எண்ணெய் விலை
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஆசிய சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 5% அதிகரித்து, ஒரு பேரல் $112 ஆக உயர்ந்துள்ளது.
எண்ணெய் விலையேற்றத்தைச் சமாளிக்க
ஈரானின் 'சவுத் பார்ஸ்' எரிவாயு வயலில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகம் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, கட்டாரின் 'ராஸ் லப்பான்' தொழிற்பேட்டை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கட்டார் தெரிவித்துள்ளது.

அமெரிக்க - இஸ்ரேலிய படைகள் தனது எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்கினால், அதற்குப் பதிலடியாக அந்த நாடுகளின் எரிசக்தி மையங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது.
உலகின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கை வழங்கும் கட்டார், பாதுகாப்பு காரணங்களுக்காக உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
எண்ணெய் விலையேற்றத்தைச் சமாளிக்க, அமெரிக்கா தனது 100 ஆண்டுகள் பழமையான 'ஜோன்ஸ் சட்டத்தை' 60 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா அல்லாத வெளிநாட்டுக் கப்பல்களையும் எரிபொருள் போக்குவரத்திற்குப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஈராக் நாட்டிற்கான எரிவாயு விநியோகத்தை ஈரான் நிறுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் இந்தத் தொடர் தாக்குதல்கள் காரணமாக, எரிசக்தி சந்தையில் நிலவும் பதற்றமான சூழல் இப்போதைக்கு முடிவுக்கு வராது எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.