கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீதுதாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொரி ஒன்று, கந்தளாய் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்ஊற்று பகுதியில் நேற்று (06.2.2026) இரவு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
விபத்து
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

குறித்த லொரி சாரதி, இதற்கு முன்னர் கந்தளாய் - சூரியபுர பகுதியில் ஒரு விபத்தை ஏற்படுத்தியிருந்தார்.அந்தச் சம்பவத்தையும் இதே ஊடகவியலாளரே அறிக்கையிட்டிருந்தார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், இன்றைய தினம் (07.2.2026) காலை கித்துல்ஊற்று விபத்தைப் படம் பிடிக்கச் சென்றபோது, பழைய கோபத்தை மனதில் வைத்துக்கொண்ட சாரதியும் அவரது உதவியாளரும் இணைந்து, தன்னை தாக்கியிருப்பதாக ஊடகவியலாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


