கிளப் வசந்த கொலை விவகாரம்: சந்தேகநபரால் வழங்கப்படவுள்ள இரகசிய வாக்குமூலம்
புதிய இணைப்பு
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான துலான் சஞ்சய் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க விரும்புவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
துலான் சஞ்சய் உள்ளிட்ட 7 சந்தேகநபர்களும் இன்று (22) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் துலான் சஞ்சய் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் ஜயவர்தன, தனது கட்சிக்காரரிடம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.
சந்தேகநபரிடம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கும் போது நீதிமன்றில் உள்ள நிபந்தனைகள் தொடர்பில் விளக்கமளித்த நீதவான் சனிமா விஜேபண்டார, அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்க சம்மதித்தால் பிற்பகல் இடைவேளையின் பின்னர் சந்தேகநபரின் இரகசிய வாக்குமூலத்தை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
அத்துரிகிரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பச்சை குத்தும் நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பலத்த பாதுகாப்பு
இந்நிலையில், பச்சை குத்தும் நிலையத்தில் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துரிகிரியவில் பச்சை குத்தும் மையம் திறப்பு விழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த 7 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானை இம்ரானுக்கு தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பாடகி கே. சுஜீவா
இது திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு எனவும், சில காலமாக நிலவி வந்த தகராறு துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துருகிரிய நகர சந்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கட்டடத்தின் மேல் தளத்தில், பச்சை குத்தும் நிலையமொன்று திறக்கும் நிகழ்வில் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பிரதம அதிதிகளாக, பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி மற்றும் பாடகி கே. சுஜீவா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
55 வயதான கிளப் வசந்த என்ற வர்த்தகரும், 38 வயதுடைய நபருமே இத்துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
பாடகி கே. சுஜீவாவும் இதில் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் இரு பெண்களும் ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கருவி
காயமடைந்த சுஜீவா மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் மற்றைய இரு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய இருவர் மேல் தளத்தில் உள்ள பச்சை குத்தும் மையத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அங்கிருந்த கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.
அதில், முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள், பச்சை குத்தும் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடுகின்றனர். துப்பாக்கிச்சூடு தாக்குதலின் போது, அந்த அறையில் ஒளிந்தவாறு தப்பிப்பதை காணக்கூடியதாக உள்ளதுடன், அவர் கிளப் வசந்தவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் என தெரிவிக்கப்படுகிறது.
திறப்பு விழாவில் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி பச்சை குத்தும் நபர் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
பிரபல பாடகி கே. சுஜீவாவும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் காரில் வந்து இரண்டு T56 துப்பாக்கிகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடத்திய விசாரணை
அவர்கள் காரை வழியில் விட்டுவிட்டு வானில் தப்பிச் செல்வதும் கெமராக்களில் பதிவாகியுள்ளன.
கொலையாளிகள் வந்த காரில் சாரதி உட்பட நால்வர் இருந்ததாகவும் அவர்களில் இருவர் துப்பாக்கிகளுடன் மேல் தளத்திற்குச் சென்ற நிலையில், மற்றுமொருவர் ரி56 ரக துப்பாக்கியுடன் காரில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கொலையாளிகள் கொரதொட்ட பகுதியில் தமது காரை நிறுத்திவிட்டு வேறு வானில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வானில் வேறு பகுதிக்கு சென்ற மர்மநபர்கள் மற்றொரு காரில் ஏறி தப்பிச் சென்றது பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், சந்தேகநபர்கள் வந்து தப்பிச் சென்ற வாகனங்கள் அனைத்தும் போலி இலக்கத் தகடுகளைக் கொண்டவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பியோடிய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக மேல் மாகாண தெற்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையில் 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தை கடுவெல பதில் நீதவான் டி.பி.ஜி கருணாரத்ன இன்று பிற்பகல் நேரில் பார்வையிட்டார்.
அந்த இடத்தில் பல தோட்டா உறைகள் காணப்பட்டதாகவும், அங்கு “KPI” போன்ற பயன்பாடு காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானி இம்ரானுக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கிளப் வசந்த
கொலை செய்யப்பட்ட கிளப் வசந்த என்பவருக்கு சொந்தமானது என கூறப்படும் துப்பாக்கி ஒன்றும் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பித்த பச்சை குத்துபவரான துலான் சஞ்சுளவுக்கு துப்பாக்கிச் சூட்டில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
திட்டமிட்டு இந்த பச்சை குத்தும் நிலையத்தை திறப்பதற்கு பிரதம அதிதியாக சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த அழைக்கப்பட்டிருக்க கூடும் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானுக்கு தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு, இது வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக, தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கமளித்தது.
இது திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு எனவும், சில காலமாக நிலவி வந்த தகராறு துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிளப் வசந்தவின் மனைவியின் கைப்பையில் கைத்துப்பாக்கி ஒன்று காணப்பட்டதாகவும், அது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2017ஆம் ஆண்டு அந்த இடத்தில் சிகை அழங்கார நிலையம் நடத்தப்பட்டதாகவும், அங்கும் அவ்வாறான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |