குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்கள் : ஜனவரி முதல் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் பணம்
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை எதிர்வரும் ஜனவரி(2024) மாதத்தின் பின்னர் தாமதமின்றி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் ரத்னசிறி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதி பெற்ற பலருக்கு இதுவரை ஜூலை மாதக் கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறவில்லை என முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சுமார் 8 இலட்சம் குடும்பங்கள் இன்னும் ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளைப் பெறவில்லை எனவும் ஜூலை மாதத்திற்கான முழு கொடுப்பனவுகள் 12 இலட்சம் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் ரத்னசிறி ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கொடுப்பனவுகளில் தாமதம்
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
அஸ்வெசும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியலுக்கு எதிரகா 10 இலட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்தநிலையில், அவற்றுள் 7 இலட்சம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள 3 இலட்சம் மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், 5 இலட்சம் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான சிக்கல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்க்கப்பட்டு அதன் பின்னர் தொடர்ச்சியாக கொடுப்பனவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.