வேட்டியை பலவந்தமாக களைந்த பொலிஸார்: கஜேந்திரன் எம்.பி பகீர் தகவல்
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டர்வகளின் வேட்டியை பலவந்தமாக களைந்து இனவாதத்தோடு மிலேச்சத்தனமாக பொலிஸார் நடந்துக்கொண்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08.03.2024) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாலை 6 மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும், பொலிஸார் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
பெரும் அராஜகம்
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த செல்வராசா கஜேந்திரன்,
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவாரத்திரி நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மிகப் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
சிவராத்திரிக்கு முன்பு இருந்தே ஆலய நிர்வாகத்தினர் மீது அடக்குமுறைகளை பயன்படுத்தி இருந்தனர். ஆலய நிர்வாகத்தினர் பூஜைக்காக ஏற்பாடுகளை செய்த போது ஆலயத்திற்கு எந்தவித பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
மேலும், தூர இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையே இருந்தது. குடிநீரை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.
5 கிலோமீற்றர் நடந்து சென்று குழந்தைகள் உட்பட பலர் தண்ணீர் தாகத்தில் இருந்த போதும் அதனை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னரே 2 மணிக்கு பின்னர் குடி நீர் கொண்டு செல்லப்பட்டது.
8 பேரை கைது
கொண்டு செல்லப்பட்ட தண்ணீரையும் மாலை நேரம் அவர்கள் திறந்து வெளியேற்றினர். பக்தர்களை அச்சுறுத்தி வெளியேற்ற முற்பட்டனர்.
படைப்பதற்காக செய்யப்பட்ட உணவுப் பொருட்களையும், பாத்திரங்களையும் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள். 10 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்களை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.
பிரார்த்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பலவந்தமாக சப்பாத்து கால்களுடன் நுழைந்த அதிகாரிகள் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். கொண்டு சென்ற போது 3 கிலோமீற்றர் நடத்தி விலங்கிட்டு இழுத்துச் சென்றார்கள். இழுத்துச் செல்லப்பட்ட போது கட்டைகள் தாக்கி கால்களில் காயமடைந்துள்ளார்கள்.
கைகளை விலங்குகளால் இறுக்கி கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரின் வேட்டியை பலவந்தமாக களைந்து கொண்டு சென்றனர்.
நெடுங்கேணி பொறுப்பதிகாரி வேட்டியை கொடுக்க வேண்டாம் எனக் கூறி இனவாதத்தோடு மிலேச்சத்தனமாக நடத்தியிருந்தார். ஏனையவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதி இருந்தும் பொலிஸார் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள்'' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |