இராணுவ வாகன சாரதியின் செயலால் ஏற்பட்ட அசம்பாவிதம்.. படுகாயமடைந்த விவசாயிகள்
பொலன்னறுவையில் இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான லொறி ஒன்று மோதியதில் வீதியில் நெல் உலர்த்திக் கொண்டிருந்த இரண்டு விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது பொலன்னறுவை - சுங்காவில பிரதான வீதியில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த இராணுவ லொறியின் ஓட்டுநர் வாகனத்தை செலுத்தும் போது உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உறக்க நிலை..
இதன்போது, இரண்டு விவசாயிகள் தங்கள் நெல்லை உலர்த்திக் கொண்டிருந்த நிலையில் இராணுவ லொறி அவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த இருவரும் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலஸ்டிகம பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும் குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் தம்பல பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 55 வயதுடைய இருவர் ஆவர்.
நீதிமன்றில் முன்னிலை..
அதேவேளை, இராணுவ லொறியின் ஓட்டுநர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த லொறியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சாரதி இன்று (15) ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய இராணுவ லொறி மின்னேரியா பீரங்கி பட்டாலியன் தலைமையகத்தைச் சேர்ந்தது என்றும், ஓட்டுநர் அந்தத் தளத்தைச் சேர்ந்த ஒரு சிப்பாய் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




