மன்னார் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து இறுதி முடிவு
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது குறித்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்தார்.
குறித்த போராட்டத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கைவிடுமாறு கோரி அரசாங்க அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் தீவு மக்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசாங்க அதிபரின் கோரிக்கை
இந்நிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்றைய தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். இவ்விசேட சந்திப்பின் உத்தியோபூர்வ கடிதம் இன்று (14) மாலை மன்னார் பிரஜைகள் குழு தலைவரிடம் மன்னார் அரசாங்க அதிபர் கையளித்தார்.
காற்றாலை மின்சாரம் கனிம மணல் அகழ்வை நிறுத்தக் கோரி தொடர் போராட்டம் மன்னார் நகர மத்திய சுற்று வட்ட பிரதான வீதி பகுதியில் 12 நாளாக இன்று (14) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் தொடர்பில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதியுடனான கூட்டத்தில் தற்காலிகமாக ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதுடன் குறித்த காலத்தில் திட்டம் தொடர்பில் சாதகமான மற்றும் பாதகமான அறிக்கையொன்றை தயாரிப்பதற்கு மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்குமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தீர்மானம் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் எரிசக்தி அமைச்சினூடாக இன்று (14) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த கடிதத்தை இன்று பிற்பகல் சுமார் 5. 50 மணி அளவில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பிரதிநிதிகள், மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ். மார்க்கஸ் அடிகளாரிடம் அரச அதிபர் கையளித்தார்.
எனவே, குறித்த கடிதத்தை பெற்றுக் கொண்ட மார்க்கஸ் அடிகளார் போராட்டத்தை கை விடுவது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




