திட்டமிடப்படாத அபிவிருத்தி நடவடிக்கைகளின் தாக்கம்: அரியநேத்திரன் அதிருப்தி
மட்டக்களப்பில் திட்டமிடப்படாத வீதியபிவிருத்தி, மற்றும் வடிகானமைப்புக்கள் இன்மை போன்ற காரணங்களால் தான் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலத்தைப் பெறுத்தவரையில் பட்டிருப்பு போரதீவு பிரதான வீதி, மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, வவுனதீவு வலையிறவு பிரதான வீதி, மற்றும் அப்பிளாந்துறை குருக்கள்மடம் படகுப்பாதை, மண்டூர் குருமண்வெளி படகுப்பாதை ஆகிய போக்குவரத்து மார்க்கங்கள் அமைந்துள்ளன.
அபிவிருத்தி நடவடிக்கைகள்
இப்போக்குவரத்து மார்க்கங்கள் ஊடகாக இப்போது நோய்காவு வண்டிகள் மற்றும் மக்களும் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் பொதுவாக உழவு இயந்திரத்தில் தான் பயணித்து வருகின்றார்கள்.
அம்பிளாந்துறை கிராமத்திலே வியாழக்கிழமை தாய் ஒருவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டு உழவு இயந்திரத்திலேயே தான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற சம்பவமும் பதிவாகியது.
எனவே, கடந்த காலங்களிலிருந்த ஜனாதிபதிகளின் ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில், முறையான திட்டமிடல்கள் மேற்கொள்ளாமல், வடிகான்கள் இன்றி வீதிகள் அமைத்தல், குளங்களை நிரப்பி வீடுகள் அமைத்தல் போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்தமையே வருடாந்தம் இவ்வாறு மாவட்டம் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடுவதற்கான காரணங்கள் ஆகும்.
தற்போதைய அரசாங்கம்
இவற்றுக்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஓரிரு நாட்களுக்குப் பெய்யும் மழையால் தொடர்ச்சியாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மாற்றத்தைக் கொண்டு வருகின்றோம் என்றுதான் தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ளது. மாற்றம் என்பது ஊழலை ஒழிப்பது என அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஊழலை ஒழிப்பது மாத்திரம் மாற்றமல்ல, அபிவிருத்தி எனும் போது இவ்வாறான மாற்றங்களையும் செய்து அது தொடர்பிலும் மாற்றங்களை முதலில் கொண்டவர வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.