தமிழகத்தில் இலங்கை கடற்படை வீரர்களுக்கு குவியும் பாராட்டு!(Photo)
இலங்கையின் தலைமன்னாருக்கு வடக்கே பழுதடைந்த இழுவை படகுடன், கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை மீட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை(30) சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
படகில் இயந்திர கோளாறு
இதனையடுத்து 6 கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க சென்று தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
இதன்போது திடீரென படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டது காரணமாக படகில் கடல் நீர் புக ஆரம்பித்ததை அடுத்து படகு மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்க தொடங்கியுள்ளது.
இலங்கை கடற்படை வீரர்களின் செயல்
இந்நிலையில் கடல் பகுதியில் ரோந்து சென்ற கடற்படை படகு, தலைமன்னாருக்கு வடக்கே உள்ள தீவுக் கடற்பரப்பில் இந்திய இழுவை படகு மிதப்பதைக் கண்டுள்ளது.
இழுவை படகை சோதனையிட்ட இலங்கை கடற்படையினர், படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இலங்கை கடற்பரப்பை நோக்கி அது வந்ததை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, மீட்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை அவர்களின் மீன்பிடி இழுவை படகுடன் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அழைத்துச் சென்று மற்றொரு இந்திய இழுவை படகில் உள்ளவர்களிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் இந்த மனிதாபிமான செயல் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழக கடற்றொழிலாளர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.
மேலதிக செய்தி-எரிமலை,சிவா மயூரி