புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தாமதம்
புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் அடுத்த வாரம் வரை தாமதமாகும் என்று நம்பகமான தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பொலிஸ் மா அதிபர் பதவி தற்போதைக்கு வெற்றிடமாக உள்ளது.
ஜனாதிபதியின் சிபாரிசு
அதன் காரணமாக நேற்று நடைபெற்ற அரசியலமைப்புப் பேரவையின் ஒன்றுகூடலின் போது குறித்த நியமனம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்றைய தினம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடிய அரசியலமைப்புப் பேரவை, புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.
தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை புதிய பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கான சிபாரிசு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலம் அரசியலமைப்புப் பேரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் அரசியலமைப்புப் பேரவையின் நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் குறித்த சிபாரிசு தொடர்பான ஆவணங்கள் அரசியலமைப்புப் பேரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த சிபாரிசு தாமதித்து முன்வைக்கப்பட்டதன் காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை கலந்துரையாடலின் போது குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதிய பொலிஸ் மா அதிபருக்கான நியமனம் இன்னும் ஒரு வாரம் வரை தாமதிக்கப்பட்டுள்ளது.



