வடக்கு தொடருந்து சேவை தொடர்பிலான விசேட அறிவிப்பு
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து பாதையின் திருத்த பணிகள் மேலும் தாமதமாகும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே இதனை தெரிவித்துள்ளார்.
திருத்த பணிகள்
அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து மார்க்கத்தின் சமிஞ்சை கட்டமைப்பு நடவடிக்கைகள் இதுவரையில் நிறைவு செய்யப்படவில்லை என்பதால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அந்த மார்க்கம் திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த தொடருந்து மார்க்க பகுதியில், வழமையாக தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்திருந்தது.
அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து மார்க்கத்தின் சமிக்சை அமைப்பை நவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும் அதற்கான ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படாததே இதற்கு காரணம் என தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
சிக்கல் நிலை
இதேவேளை, சமிக்சை அமைப்பு நவீனமயப்படுத்தி மீண்டும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அந்த தொடருந்து பாதையின் திருத்த பணிகள் மேலும் தாமதமாகும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திருத்த பணிகள் காரணமாக, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை வழமையாக தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.