அரசியலமைப்பை மீறியுள்ள ஜனாதிபதி : எழுந்துள்ள அதிரடி குற்றச்சாட்டு
ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறியுள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜிவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது
நீதிமன்ற அமைப்பின் திறனை அதிகரிப்பதற்கு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று எந்தவொரு அறிக்கையிலோ அல்லது தரப்பிலோ முன்மொழியப்படாத நிலையிலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்குத் தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
வெற்றிடங்களை நிரப்பாமல் இந்த வயதெல்லை நீடிப்பை மேற்கொள்வது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நேரடி அரசியலமைப்பு மீறல் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் 8 நீதிபதி வெற்றிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. வழக்கமாக ஒரு நீதிபதி ஓய்வுபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அடுத்த நியமனத்திற்கான பெயரை ஜனாதிபதி பரிந்துரைப்பதே மரபு. ஆனால், அந்த அரசியலமைப்பு கடமையை ஜனாதிபதி செய்யத் தவறியுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
நிலுவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்பாமல், வேறு வழிகளில் நீதித்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசு முயல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்தச் செயல் அரசியலமைப்பை மீறும் செயல் எனவும், இது ஒரு வகையான ஊழல் எனவும் தாம் பொறுப்புடன் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
தெளிவான அரசியலமைப்பு மீறல்
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் நீதி அமைச்சு இணைந்து, நீதிபதிகளின் ஆலோசனையுடன் தயாரித்த விரிவான அறிக்கையில் கூட ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சட்டம் தொடர்பான மாற்றங்களின் போது சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனை பெறப்படும் என்ற வாக்குறுதியும் மீறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மூலம் இச்செய்தியை அறிந்த பின்னர், இது குறித்து விளக்கம் கேட்டு 2026 மார்ச் 30 அன்று நீதி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சட்டத்தரணிகள் சங்கம் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி, கடந்த மே 25 அன்று ஜனாதிபதிக்கே நேரடியாகத் தமது கடுமையான எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாகப் பதிவுசெய்துள்ளதாக ராஜிவ் அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு வெற்றிடங்களை வைத்துக்கொண்டு ஒரு நீதித்துறை நிறுவனத்தை எவ்வாறு இயக்க முடியும்? இன்றளவிலும் அந்த வெற்றிடங்களை ஜனாதிபதி நிரப்பவில்லை. அதைப்பற்றிப் பேசாமல் தேவையில்லாத காரணங்களைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள என ராஜிவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் படி ஜனாதிபதி பெயர்களைப் பரிந்துரைத்து அனுப்ப வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பது தெளிவான அரசியலமைப்பு மீறலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.