தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் பின்னிற்கும் அநுர : மன்னார் ஆயர் கவலை
புதிய அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கவும், போதைவஸ்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை உறுதியாக்கவும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன.
ஆயினும் தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இந்த அரசாங்கம் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இறைவனின் இரக்கத்தாலும், புனித ஆட்சி பீடத்தின் ஆதரவாலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மறைமாவட்ட இறைமக்களுக்கு எழுதும்,திருவருகைக் காலத் திருமடல் - 2025 இல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
*குறித்த மடலில் மேலும் குறிப்பிடுகையில்.. திருவருகைக்காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகிறது.
இயேசுவின் பிர சன்னத்தை –உடனிருப்பை ஆழமாக உணர்கின்ற ஒரு சிறப்பான சந்தர்ப்பம் இந்தத் திருவருகைக்காலம். 'கடவுள் நம்மோடு இருக்கிறார்' என்ற ஆறுதலின் செய்தியை தனது திரு பிறப்பின் மூலம் இறைமகன் இயேசு மீளவும் இந்நாட்களில் நமக்கு வலியுறுத்துகின்றார்.
எனவே கடவுளின் உடன் இருப்பையும், அவருடைய அளவுகடந்த அன்பையும் இன்னும் ஆழமாக இந்தக் காலத்தில் உணர்ந்து, இறைமகன் இயேசுவின் வருகைக்கு நம்மை தகுந்த முறையில் ஆயத்தம் செய்வோம்.
மன்னார் மறைமாவட்ட மேய்ப்பு பணி மாநாடு
ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்ட மேய்ப்பு பணி மாநாடு இவ்வாண்டும் கடந்த ஒக்ரோபர் மாதம் 27, 28, 29 ஆகிய தினங்களில் மன்னாரில் சிறப்பாக நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டு மன்னார் மறை மாவட்டத்தில் 'தூய ஆவியின் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூய ஆவியை மையப்பொருளாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.
குருக்கள், துறவியர், பொதுநிலையினர் என ஏறக்குறைய 200 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பங்குகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.
தீர்மானங்களை அடியொற்றி ஒவ்வொரு பங்கும், ஆணைக்குழுவும், துறவற இல்லமும் தமது சூழ்நிலை, வசதி, வாய்ப்புகளை கவனத்தில் கொண்டு தமக்கான பிரத்தியேகமான மேய்ப்புப்பணி திட்டங்களைத் தீட்ட வேண்டும்.
நாட்டின் இன்றைய சூழ்நிலை
பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள புதிய அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கவும், போதைவஸ்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை உறுதியாக்கவும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன.
ஆயினும் தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இந்த அரசாங்கம் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே இந்தச் சூழ்நிலையில் தமிழர் நலன் சார்ந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புக்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து பற்றுறுதியோடு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறித்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.