அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப்பிடம் பகிரப்பட்டுள்ள விபரங்கள்
இலங்கையின் நாடாளுமன்றில் நாளை சமர்ப்பிக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளையும், மேலும் அரச வேலைகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அளவுக்குள் இவை இருக்கும் என்று நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட விபரங்கள்
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தேவைகளுக்கு ஏற்ப வரவு செலவுத் திட்டத்தின் விபரங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரசுத் துறையின் ஆட்சேர்ப்புகள் பாதீட்டுக்கு பின்னர் ஆரம்பிக்கும். ஆனால் அவை அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாடுகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்றும் குறித்த அதிகாரி கூறியுள்ளார்.
பாதீட்டில் பாதுகாப்பு அமைச்சக ஒதுக்கீடுகள் 442 பில்லியன் ரூபாய்களாக உள்ளன, இதில் 382 பில்லியன் தொடர்ச்சியான செலவீனங்களுக்காகவும், 60 பில்லியன் ரூபாய்கள் மூலதனச் செலவீனங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
